கேளிக்கை

‘ஜகமே தந்திரம்’

(UTV |  சென்னை) – மதுரை ரவுடி, லண்டனுக்குச் சென்று என்ன செய்தார் என்பதுதான் ‘ஜகமே தந்திரம்’.

மதுரையில் ரவுடியாக வலம் வருபவர் புரோட்டா கடை வைத்திருக்கும் சுருளி. அவருக்கு திடீரென்று லண்டன் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அது ஏன், எதற்கு, எப்படி, அங்கு போய் என்னவெல்லாம் செய்தார், அதனால் என்ன ஆனது, அவருடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்ததா, இல்லையா என்பதுதான் ‘ஜகமே தந்திரம்’ கதை. இது கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. ஆனால், திரைக்கதையில் முழுமையாகக் கோட்டை விட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

தனுஷுக்கு சுருளி கதாபாத்திரம் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. படத்தின் பெரும்பகுதி கெட்டவனாகவும், இறுதியில் திருந்துவது மாதிரியான கதாபாத்திரம்தான். பல இடங்களில் ரஜினியின் சாயலை தனுஷிடம் பார்க்க முடிகிறது.

ஜோஜு ஜார்ஜுக்கு நல்ல கதாபாத்திரம். நன்றாக நடித்துள்ளார். ஆனால், இது தமிழில் சரியான அறிமுகப் படம் தான் என்று சொல்ல முடியவில்லை. ஐஸ்வர்யா லட்சுமியும் காட்சிகளுக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளார். சொந்த குரலில் இலங்கைத் தமிழில் சிறப்பாகப் பேசியுள்ளார். ஆனால், ஒரு மாஸ் ஹுரோவுக்கான படத்தில் ஹீரோவை திருத்தும் ஹீரோயினுக்கு எவ்வளவு வேலை இருக்குமோ அவ்வளவுதான். வடிவுக்கரசி, ஷரத் ரவி, கலையரசன், சவுந்தரராஜன், தீபக் பரமேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களுக்குப் படத்தில் பெரிய இடம் இல்லை.

படத்தின் வில்லனாக ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ. தமிழ்ப் படங்களில் ஹாலிவுட் நடிகர்களைப் பார்க்கும்போது, அனைவருமே நடிப்பு வராத மாதிரியே நடித்திருப்பார்கள். இல்லை என்றால் அனைத்துக் காட்சிகளிலும் ஒரே மாதிரி நடித்திருப்பார்கள். அப்படித்தான் இந்தப் படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ இருக்கிறார். அவருக்கான வசனங்கள் ஆங்கிலத்திலேயே இருந்தாலும் இவரா ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ உள்ளிட்ட படைப்புகளில் நடித்தார் என்று ஆச்சரியமாக உள்ளது.

தனுஷ் திரையில் படத்தைக் காப்பாற்றப் போராடியிருக்கிறார் என்றால், திரைக்குப் பின் தனது பின்னணி இசையின் மூலம் சந்தோஷ் நாராயணன் போராடியிருக்கிறார் என்று சொல்லலாம். படத்தின் பின்னணி இசை அற்புதம். இரண்டு பாடல்கள் வேண்டாம் என்று முடிவு செய்தது கதையோட்டத்துக்கு நன்றாக இருந்திருக்கலாம். ஆனால், புஜ்ஜி பாடலை நீக்கிவிட்டு ஜோஜு ஜார்ஜ் கும்பலிடம் தனுஷ் மாட்டும் காட்சியைக் காட்டியதில் முழுமை இல்லை.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்தின் கதைக்களத்துக்குப் பெரிதாகக் கைகொடுத்துள்ளது. லண்டனிலிருந்து மதுரை வரை அனைத்து இடங்களையுமே அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அதிலும் இறுதிக் காட்சியில் பனிப்பொழிவுக்கு (கிராஃபிக்ஸாக இருந்தாலும்) நடுவில் வரும் துப்பாக்கிச் சண்டை படமாக்கப்பட்டுள்ள விதம், தரம்.

தனுஷின் சேட்டைகளோடு உற்சாகமாக ஆரம்பிக்கும் படம், தொடர்ந்து சின்னசின்ன நகைச்சுவை, லண்டன் பயணம், அங்கு அவருக்குக் கிடைக்கும் அனுபவங்கள் என முதல் ஒரு மணி நேரம் சுவாரசியம். அடுத்து இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையைக் கதைக்குள் கொண்டுவந்த விதமும் சரியாக அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி அரசியல் ரீதியாகப் படத்தில் சொல்லப்படும் விஷயங்கள், அதன் நோக்கம் இரண்டையும் பாராட்டலாம்.

ஆனால், இதுதான் கதை என்று நமக்குத் தெளிவான பின்பு, அடுத்தடுத்த காட்சிகள், ஒரே ஒரு திருப்பம், இறுதிக் காட்சியில் யார் யாரை எப்படி அடிப்பார்கள் என்பது உட்பட அத்தனையும் ஊகிக்க முடிகிற அளவுக்குப் படம் மாறுவதுதான் மிகப்பெரிய பிரச்சினை. இது கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையா என்று பல இடங்களில் யோசிக்க வைக்கிறது. எதிர்பார்த்த விஷயங்களே நடப்பதால் படத்தின் இரண்டே முக்கால் மணி நேர நீளம் இன்னும் நீளமாகத் தெரிகிறது.

அடுத்த பிரச்சினை பாத்திரப் படைப்பு. ஜாலியான கதாபாத்திரம் சுருளி என்று காட்டியதால் அவர் செய்யும் விஷயங்கள் எதையுமே தீவிரமாகப் பார்க்க முடியவில்லை. அவருடைய காட்சிகள் எதிலுமே சுத்தமாக லாஜிக் என்பதே இல்லை. மேலும் அவர் இங்கிருந்து லண்டன் செல்வதற்கான காரணம், அங்கு அவருடைய திட்டங்கள், அதைச் செயல்படுத்தும், பேசிய தன்னைக் கொல்ல வருபவர்களிடமிருந்து தப்பிப்பது, திடீர் மனமாற்றம் என எல்லாமே சுலபமாக நடந்துவிடுகிறது. சுத்தமாக நம்பகத்தன்மை இல்லை. தனுஷ் கதாபாத்திரம் மட்டுமல்ல, இதர கதாபாத்திரங்கள் எதிலுமே முழுமை இல்லை.

ஜோஜு ஜார்ஜுக்கான காட்சிகளை இன்னும் அதிகரித்திருக்கலாம். அவர் மொத்தமாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். இவ்வளவு ஜாலியாக இருக்கும் நாயகன், தனது புத்திசாலித்தனத்தோடு ஜாலியாகவே ஒரு லண்டன் டானைப் பழிவாங்கும் கதையாக இரண்டாவது பாதி இருந்திருந்தால் குறைந்தபட்சப் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் கிடைத்திருக்கும். ஆனால், மக்களின் பூர்வீகத்தை வைத்து உலக நாடுகள் செய்யும் அரசியல் என்று பெரிய விஷயத்தைச் சொல்லும் அளவுக்கு முன்னரே சரியான அஸ்திவாரம் திரைக்கதையில் அமைக்கப்படவில்லை.

மொத்தத்தில் இந்த ‘ஜகமே தந்திரம்’ ஓடிடி தளத்தால் அதிக விலைக்கு வாங்கப்பட்டு வெளியானது என்ற வரையில் வேண்டுமானால் வெற்றிப் படமாக இருந்திருக்கலாம். ஆனால், ரசிகர்கள் பார்வையில் தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. திரையரங்கில் பார்த்திருந்தால் எவ்வளவு பெரிய ஏமாற்றமாகியிருக்கும். அதற்கு இது பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம்.

Related posts

பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் காலமானார்

சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் இவர்கள்தான்

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை