(UTV|COLOMBO)-சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத முறையில் வாகன உற்பத்தி மற்றும் வாகனப் பாவனை (Green Vehicle) ஆகியவற்றை எதிர்வரும் காலங்களில் ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாகனத்துறை சார்ந்தோர் தயாராக வேண்டியதன் அவசியத்தை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் கடந்த வருடம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி மூலோபாய (SDG – ௦9) செயற்பாடுகளுடன் ஒட்டியவகையில், இவ்வாறான பசுமைத் திட்டங்களே எதிர்கால சமூகத்துக்குப் பயனளிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கண்காட்சிகள் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் (SLECC) இடம்பெற்ற கொழும்பு மோட்டார் சைக்கிள் கண்காட்சி மற்றும் சர்வதேச வாகன உதிரிப்பாகங்கள் – 2௦18 கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,
இலங்கையின் மோட்டார் வாகனத்துறையில் என்றுமில்லாதவாறு, முதற்தடவையாக நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
பிரசித்தி பெற்ற முன்னணி மோட்டார் சைக்கிள் மற்றும் இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்கள், பாவனையாளர்களுடன் இணைந்து, வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தமது நவீன உற்பத்திகளையும், சேவைகளையும் ஒருமித்துக் காண்பிக்கும் கண்காட்சியாக இது நடைபெறுவது பெருமிதமளிக்கின்றது.
இலங்கையின் வாகனப் பாவனையானது தொடர்ச்சியாக அதிகரிப்பில் இருப்பதையே புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன. அந்தவகையில், 2013ஆம் ஆண்டு 5.2 மில்லியன் வாகனப் பாவனை இருந்த இலங்கையில், கடந்த வருடம் 7.2 மில்லியனாக அது அதிகரித்து, 38 % சதவீத அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டி நிற்கின்றது.
மொத்த வாகனப் பாவனை வகைப்படுத்தலில் மோட்டார் சைக்கிளே பெருமளவான பங்கினை வகிக்கின்றது. கடந்தவருடம் மொத்த வாகனப் பாவனையில் மோட்டார் சைக்கிளின் பயன்படுத்துகை 56% சதவீதமாக இருக்கின்றது.
இலங்கையின் எதிர்கால போக்குவரத்துத் துறையில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வாகன உற்பத்தி, இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் மற்றும் இலத்திரனியல் தன்னியக்க வாகனங்களின் பாவனையை அரசாங்கம் முன்னிலைப்படுத்தி வருவதுடன், நிலைபேறான செயற்பாட்டுக்கு இதுவே உகந்தாக அமைந்துள்ளது.
அந்தவகையிலேயே, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, நிலைபேறான மூலோபாய சட்டவரைபுக்கு முதன்மையளித்து தூரநோக்கான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.
இதன் காரணமாகவே, கைத்தொழிற் துறையை ஊக்குவிக்கும் வகையிலான ஐக்கிய நாடுகளின் எஸ்.டீ.ஜீ 9.2 (Sustainable Development Goal) திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தினோம். இந்த சர்வதேச செயற்பாடானது, கைத்தொழில் கழிவு முகாமைத்துவம், நிலைபேறான கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் பசுமைத் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு உதவியாக அமைந்து, சுற்றுச் சூழலை பாதுகாக்கின்றது என்று அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்வில், செம்ஸ் கிலோபல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷஹீத் சர்வார், செம்ஸ் லங்கா பிரைவட் லிமிடட்டின் பணிப்பாளர் இஜாஸ் சர்வார், ஏ.எம்.டபிள்யூ லிமிடட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரெண்டன் மொரிஸ் ஆகியோர் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.
-ஊடகப்பிரிவு-
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]