பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் ஊடாக மக்கள் பிரதிநிதிகளும், திணைக்களத் தலைவர்களும் இணைந்து பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.
இம்முறைமையை மாற்றி காலை 9.30 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை தொடர்ந்து பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் நடைபெறுவதால் மக்கள் பிரதிநிதிகளும், திணைக்களத் தலைவர்களும் பகல் உணவுமின்றி ளுஹர் தொழுகையிமின்றி பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பொது நிருவாக உள்நாட்டு மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரின் சுற்று நிரூபத்தின் படி பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் 2 1/2 மணித்தியாலங்கள் நடைபெற வேண்டும் எனவும், அவசர சூழ்நிலைகளில் 3 1/2 மணித்தியாலங்கள் வரை நடாத்தலாம் என்ற சுற்று நிரூபத்தை மீறி 5, 6 மனித்தியாலங்கள் தொடர்ந்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடாத்துவதை நிறுத்த வேண்டும் என நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற போது உரையாற்றிய அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் தொடர்ச்சியாக 5,6 மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளன.
பொது நிருவாக உள்நாட்டு மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரின் சுற்று நிரூபத்தின்படி ஒரு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2 1/2 மாணித்தியாலங்கள் நடைபெற வேண்டுமென கூறப்படுகிறது.
இந்த நேரத்தை மக்கள் பிரதிநிதிகளும், திணைக்களத் தலைவர்களும் இணைந்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராகவும், நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளேன்.
இதுவரை காலமும் நமது பிராந்தியத்தில் அரசியல் தலைவர்களின் பதவிக் காலங்களில் அவர்களால் முடிந்தளவு மக்களுக்கான பணிகளைப் புரிந்துள்ளனர்.
ஆனால் இதுவரையும் நமது அரசியல் தலைவர்கள் மக்களுக்கான எந்த பணியும் புரியவில்லை என மக்கள் பிரதிநிதிகளும் திணைக்களத் தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டங்களில் தெரிவிக்கின்ற கருத்து கவலைக்குரிய விடயமாகும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களால் நிந்தவூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தித் திட்டம்
நிந்தவூருக்கு மாத்திரம் என நினைத்து விட வேண்டாம், முழு கிழக்கு மாகாணத்திற்கும் பணிபுரியக் கூடிய நிலமையில் அது திட்டமிடப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தினால் நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தித் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே, புதிய அரசாங்கத்திடம் நிதியுதவியைப் பெற்று நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுங்கள்.
மக்கள் நலன்பெறும் இவ்வாறான திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஆதம்பாவா பாராளுமன்ற உறுப்பினர் நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தித் திட்டத்தின் தொடர் வேலைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து விஷேட நிதி ஒதுக்கீட்டினை பெற்று கிழக்கு மாகாண மூவின சமூகமும் நன்மை பெறக்கூடிய இத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
மேலும் நிந்தவூரிலிருந்து சம்மாந்துறைக்குச் செல்லும் வீதியையும், பாலத்தினையும் நிர்மாணிப்பதற்கான பணிகளையும் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னுரிமைப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.ஏ.லத்தீப் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. தாஹிர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-கே எ ஹமீட்