வணிகம்

சுற்றுலா துறையில் இலங்கை முன்னேற்றம்

(UTV | கொழும்பு) –  சுற்றுலா ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆசிய நாடுகளின் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் உறுப்பு நாடுகளுடனான மெய்நிகர் ரீதியான வணிக ஊடாடும் அமர்வை 2021 ஆகஸ்ட் 17ஆந் திகதி இலங்கை சுற்றுலா அபிவிருததிப் பணியகத்துடன் இணைந்து இலங்கை வெளிநாட்டு அமைச்சு ஏற்பாடு செய்தது.

இருபத்தேழு ஆசிய உறுப்பு நாடுகளில் உள்ள தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டில் பொது மற்றும் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 சுற்றுலாத் துறை வல்லுநர்கள் இந்த வெபினாரில் பங்கேற்றனர்.

சர்வதேச கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் மிகவும் நெகிழக்கூடிய மற்றும் நிலையான சுற்றுலாத் துறையை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து இந்தக் கலந்துரையாடல்களின் போது கவனம் செலுத்தப்பட்டன.

தொடக்கவுரைகளை வழங்கிய பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, இலங்கை அரசாங்கம் தனது அசைக்க முடியாத மற்றும் முழுமையான அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியிருந்தாலும், கோவிட்-19 தொற்று நோயின் பயங்கரமான அலைகளால் கவலைக்கிடமான பொருளாதார மற்றும் சமூகத் தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.

தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும், எமது மக்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அபிலாஷைகளை நிலை நிறுத்துவதற்கும் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கும் வகையில் ஆசிய உறுப்பு நாடுகளின் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் பற்றிய மாநாடு உட்பட அனைத்து சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நட்பு அரசாங்கங்களுடன் இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையானது பரந்த திறந்தவெளி மற்றும் இயற்கை சார்ந்த அனுபவங்கள் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் நாட்டில் சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சி தொடர்பான முயற்சிகளில் இலங்கையின் வளமான அனுபவங்களைப் பற்றி விரிவாகப் பேசுவதன் மூலம் தொற்றுநோய்க்குப் பிந்தைய பயண இடமாக தன்னை நிலைநிறுத்துவதற்கான அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளது என்பதை இலங்கை சுற்றுலாத் துறையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தனது முக்கிய உரையில் எடுத்துக்காட்டினார்.

இலங்கைக்கு உள்வரும் சுற்றுப்பயண செயற்படுத்துனர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹேன் காரியவசன், சுற்றுலாத்துறையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சங்கத்தின் தலைவர் ரொஹான் அபேவிக்ரம மற்றும் இலங்கை ஹோட்டல் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்தே ஆகியோர் இந்த அமர்வில் உரையாற்றினர். அமர்வை இலங்கை சுற்றுலா சந்தைப்படுத்தல் பணிப்பாளர் துஷான் விக்கிரமசூரிய நிர்வகித்தார்.

இந்த விடயத்தில் தமது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளும் போது, வெபினாரில் பங்கேற்கும் உலகளாவிய தொழில் வல்லுநர்கள், கோவிட்டுக்குப் பிந்தைய சூழலில் ஆசியப் பிராந்தியத்தில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டிற்குள் சுற்றுலா மறுமலர்ச்சிக்கான முன்னோக்கு வழியை உருவாக்குவதற்கான வரை படத்தை உருவாக்க ஒப்புக்கொண்டனர்.

தொடர்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகள் பற்றிய மாநாடானது ஆசியாவில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இருபத்தேழு உறுப்பு நாடுகளின் பன்னாட்டு மன்றம் ஆகும். ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் முழு அங்கத்துவத்தை 2018 இல் இலங்கை பெற்றதுடன் தற்போது சுற்றுலாத்துறையில் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கான இணை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகின்றது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

பாகிஸ்தான்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம்?

வெங்காயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி

சுற்றுலாத்துறை – வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு