‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் செவ்வாய்கிழமை (04) இடம்பெறவுள்ளன.
வழமைக்கு மாறாக இம்முறை காலி முகத்திடலில் அன்றி சுதந்திர சதுக்கத்தில் இந்நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று நண்பகல் 12 மணிக்கு கடற்படையினரால் சம்பிரதாய பூர்வமாக 25 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்படும்.
பொலிஸாருடன் இணைந்து அன்றைய தினத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்றைய தினத்தில் விசேட போக்கவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மக்களுக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களைக் குறைக்கும் வகையில் ஒத்திகைகளும், பிரதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் போது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவிக்கையில், ஒட்டுமொத்தமாக 4421 பேர் மரியாதை அணி வகுப்புக்களில் பங்கேற்கவுள்ளனர்.
அவர்களில் 1211 இராணுவ வீரர்களும், 668 கடற்படை வீரர்களும், 461 விமானப்படை வீரர்களும், 289 பொலிஸாரும், 182 விசேட அதிரடிப்படையினரும், 175 சிவில் பாதுகாப்பு படையினரும், 486 தேசிய கெடட் படையினரும் உள்ளடங்குகின்றனர்.
சுதந்திர தின நிகழ்வின் பங்கேற்கும் படை வீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 6745 வீரர்கள் மரியாதை அணிவகுப்புக்களில் பங்கேற்றிருந்த நிலையில், இம்முறை அந்த எண்ணிக்கை 4421 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இம்முறை எவ்வித வாகன அணிவகுப்பும் இடம்பெறாது.
தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்காக விமானப்படையின் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரமே பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு 19 உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
அத்தோடு இம்முறை எவ்வித வாகன அணிவகுப்பும் இடம்பெறாது. முப்படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பு மாத்திரமே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எம்.மனோசித்ரா