உள்நாடு

சுதந்திரம் யாருக்கோ என எண்ணுமளவில் சிறுபான்மையினர் : ரிஷாத்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத ஒரு சூழ்நிலையில், சிறுபான்மைச் சமூகங்கள் நாளைய கொண்டாட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்ப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டின் சுதந்திர தினம் குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

நமது நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரும் அரசியல், மதம், சமூக, பொருளாதார, வாழ்வியல் உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்கவே வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து நாட்டை மீட்கப் போராடினர். இந்தப் போராட்டத்தில் பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் சகல சமூகங்களையும் சார்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக பொதுமக்களும், நாட்டின் சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்புடன் உழைத்ததுதான் வரலாறு.

இத் தினம், குறித்த ஒரு சமூக, மதத்துக்கான சுதந்திரம்தானோ? என எண்ணுமளவுக்கு ஓரங்கட்டப்படும் நிலைதான் சிறுபான்மை சமூகத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது. நாட்டுப்பற்றில் சிறுபான்மை சமூகங்களுக்கு உள்ள அளவுகடந்த ஆர்வத்தை உதாசீனம் செய்வதாகத்தான், இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் எமக்குத் தெரிகின்றன. இது தமிழ் மொழியில் தேசிய கீதம் மறுக்கப்படுவதிலிருந்து ஊர்ஜிதமாகின்றது.

எனவே, தனித்த ஒரு சமூகத்துக்கான கொண்டாட்டங்களாகவன்றி, சகலரையும் நாட்டுப்பற்றுடன் நேசிக்கின்ற சுதந்திர தின ஏற்பாடுகளைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இருந்தும், அரசியல் நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டாலும் நாட்டுப் பற்றை கைவிடும் மனநிலையில் சிறுபான்மையினர் இல்லை என்பதை ஆணித்தரமாக கூற விரும்புகின்றோம். இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

300 ரூபாவாக மாறிய டொலர்!

கடன் சுமை குறித்து பிரதமர் அம்பலப்படுத்தினார்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை