நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரையும், மற்றொரு நபரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது.
பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்று (27) பிற்பகல் இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, 8 பிரதிநிதிகள் சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடினர், ஆனால் அது பலனளிக்காத காரணத்தால் அவர்கள் அந்த இடத்திலேயே தங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மேற்படி ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி குறித்து பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, மருதானை பொலிஸ் பிரிவில் உள்ள வைத்தியசாலை சதுக்கம், சுகாதார அமைச்சு மற்றும் அருகிலுள்ள வைத்தியசாலைகள் வளாகம், டீன்ஸ் வீதி, டி சேரம் வீதி, ரீஜன்ட் வீதி மற்றும் தேசிய வைத்தியசாலை சதுக்கத்தைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் நடைபாதைகளைத் தடுக்கும் வகையிலும், போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதையும், சுகாதார அமைச்சுக்கு முன் ஒன்றுகூடுவதையும் தடைசெய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.