அரசியல்உள்நாடு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் – மன்னாரில் கூடிய ஒருங்கிணைப்புக் குழு!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நேற்று (28) மாலை, மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் உட்பட பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பாதுகாப்புப் துறை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை பாதிப்புகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அத்தியாவசிய உதவிகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் தங்கியிருப்பவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுகளை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவது குறித்தும், வெளியேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

சீரற்ற காலநிலையால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ஒரு வாரத்திற்கு தேவையான உலர் உணவுகளை வழங்குவது குறித்தும், கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கு அமைவாக, 38 மில்லியன் ரூபாய் நிதிக்கான கோரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்கான கோரிக்கையும் குறித்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், மீன்பிடித்துறை, கால் நடைகள் மற்றும் விவசாய பாதிப்பு குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், அதற்கான உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கக் கூடிய வழிவகைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

-ஊடகப்பிரிவு

Related posts

இம்மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதி !

2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று