அரசியல்உள்நாடு

சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம்

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீமெந்து ஒரு ரூபாவால் குறைவதுடன், ஒரு மூடை சீமெந்தின் விலை சுமார் 100 ரூபாவால் குறைவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த புதன்கிழமை (08) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், 1979ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14ஆம் பிரிவின் கீழ் 2400/25ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை, 2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4)ஆம் பிரிவின் கீழ் 2399/16ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மற்றும் 2401/19ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை, 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 06 கட்டளைகள் மற்றும் 2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் 2415/66ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் என்பன குழுவில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதற்கமைய, 1979ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14ஆம் பிரிவின் கீழ் 2400/25ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதன் கீழ் ஏற்றுமதி அபிவிருத்திக்கு விதிக்கப்படும் செஸ் வரி மூலம் பெரும் வருமானத்தை நேரடியாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தம் என குழுவின் தலைவர், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்தின்போது ஏற்பட்ட கருங்கல் ஏற்றுமதிக்காக விதிக்கப்பட்ட வரியை குறைப்பதற்கான முன்மொழிவுக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய அந்தக் கருங்கல் ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் ஏற்றுமதிக்கு ஒரு கன மீட்டருக்கு 1000 ரூபா வரி அறவிடப்படும்.

அத்துடன், 2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் 2415/66ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் கருத்திற் கொள்ளப்பட்டது.

இதன்போது, இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

இதன்போது, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும் பதினைந்தாயிரம் ரூபா உதவித்தொகையை 17,500 ரூபாவாகவும், 8,500 ரூபா வழங்கும் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்குவதற்கும், 2,500 ரூபா வழங்கும் குடும்பங்களுக்கு 5,000 ரூபா வழங்குவதற்கும் மேலும் 5,000 ரூபா வழங்கும் குடும்பங்களுக்கு அந்தத் தொகை மாறாமல் வழங்குவதற்கும் குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், 2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4)ஆம் பிரிவின் கீழ் 2399/16ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவித்தலுக்கு குழுவின் அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன், 2401/19ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு பகுதியில் நிர்மாணிக்கப்படும் ஆடைத் தொழிற்சாலை தொடர்பான கட்டளையை மீண்டும் குழுவில் கருத்திற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், செல்லுபடியாகும் காலங்களை நீட்டிப்பதற்கும் வரிகளைக் குறைப்பதற்கும் 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 06 அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட 06 கட்டளைகள் குழுவில் கவனத்தில் கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கெளஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்னாயக்க, திலின சமரகோன், லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

இன்று முதல் இ.போ.ச டிப்போக்கள் ஊடாக தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள்

UNP பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அகில விராஜ் காரியவசம் இராஜினாமா

புதிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்