உள்நாடு

சீனாவில் இருந்து வந்த விமானம் உட்பட மேலும் சில விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (07) காலை நிலவிய அடர்ந்த பனிமூட்டமான நிலைமை காரணமாக அங்கு தரையிறங்க வந்த 4 விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓடுபாதை சரியான முறையில் தென்படாததால் விமானங்கள் மத்தள விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

அதன்படி, இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யு.எல்-226 விமானத்தையும், சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-881 விமானத்தையும், இந்தியாவின் பெங்களூரில் இருந்து அதிகாலை 05.05 மணியளவில் வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-174 விமானத்தையும் மத்தள விமான நிலையத்திற்குத் திருப்பிவிட நடவடிக்கை எடுத்துள்ளன.

மேலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து காலை 6:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-730, இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில், அந்த விமானங்களில் இருந்த பயணிகள் அங்கு தரையிறக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட அனைத்து விமானங்களும் இன்று காலை 09:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

மேலும், இன்று காலை 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நிலவிய அடர்ந்த பனிமூட்டம் படிப்படியாக குறைந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த அனைத்து விமானங்களும் திசை திருப்பப்படாமல் வழமை போன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

Related posts

ரஞ்சனை பார்வையாளர்கள் சந்திக்கத் தடை

ரஹ்மத்துடைய ரமழானில் இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு!