உள்நாடு

சிறைக்கூடத்தில் ஒருவர் உயிரிழப்பு : பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – எம்பிலிபிட்டி – பணாமுரே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தினுள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானும் தனது குழந்தையும் தாக்கப்பட்டதாக குறித்த நபரின் மனைவி அளித்த முறைப்பாட்டையடுத்து நேற்று (16) குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 37 வயதான குறித்த சந்தேகநபர், பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தினுள் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் என்றும் இதனையடுத்து அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நபர் உயிரிழந்ததையடுத்து, பணாமுரே பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய பிரதேசவாசிகள், பொலிசாரினால் தாக்கப்பட்டு குறித்த நபர் கொலை செய்யப்பட்டதாகக்கூறி, பொலிசாருக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டு, கலகம் விளைவித்திருந்தனர்.

இதேவேளை, குறித்த நபர் பொலிசாரினால் தாக்கிக் கொலை செய்யப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினர்.

இந்தச் செயற்பாட்டைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முற்பகல் நாடாளுமன்றில் எழுந்து நின்று எதிர்ப்பையும் வெளியிட்டனர்.

இது சம்பந்தமாக நாடாளுமன்றில் விளக்கமளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்ததுடன் குறித்த இளைஞர் நேற்றிரவு 10 மணியளவிலே கைது செய்யப்பட்டதாகவும் தமது மேற்சட்டையை பயன்படுத்தி சுருக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் அவரை மீட்டபோதும் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்.

Related posts

கொழும்பு – ஷாங்காய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்க சீனா தீர்மானம்

editor

அஜித் பிரசன்னவிற்கு பிணை