அரசியல்உள்நாடு

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்தத் திட்டம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

இலங்கை முழுவதிலும் 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குவதாகவும், இவற்றில் 47 நிலையங்கள் அரசாங்கத்திற்குரியது என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஏனைய அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுசரணையுடன் பராமரிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதிலும் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திறன்களை மேம்படுத்தவும் அவற்றின் பௌதீக வள, மனிதவள மேம்பாட்டிற்கும் இந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (21)அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் கூடியபோதே இந்தத் தகவல்கள் முன்வைக்கப்பட்டன.

சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள், திணைக்களத்தின் ஊடாக பல்வேறு வழிகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைக் கருத்தில் கொள்ளும்போது ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருந்தபோதும் இந்த நிதி அந்தச் சிறுவர்களுக்கு உரிய முறையில் சென்றடைகின்றதா என்பதைக் கணக்காய்வு செய்வதற்கு முறையான கட்டமைப்பு எதுவும் இல்லையென்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நன்னடைத்தை அதிகாரிகளின் சுற்றிவளைப்புக்களில் சில சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இதுவரை மூடப்பட்டிருப்பதாகவும், அந்தச் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்கான நடைமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதிலளித்தார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு பணமீட்டும் அமைச்சு அல்ல என்றும், மாறாக கிராமப்புற மற்றும் பொருளாதார அடிப்படையில் சமூக நலனை மேம்படுத்துவதற்கு முதன்மையாக பங்களிக்கும் அமைச்சு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, மக்களுக்கு நன்மை செய்வதே முக்கியப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும், அதற்காக ஒதுக்கப்படும் அனைத்து நிதி மற்றும் ஏனைய ஒதுக்கீடுகளை சமூக நலனுக்காக சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய அடையாள அட்டை தயாரிப்பதில் உள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலையால் பௌத்த பிக்குனிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான வழிமுறையை வகுப்பது குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், சூப்பர் மார்க்கட்டுகளுக்கு அருகில் யாசகம் மற்றும் பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் பாடசாலை சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்தும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினர்.

இதனைத் தடுப்பதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டம் போதுமானதாக இருந்தாலும் அவற்றைச் செயற்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக குழுவில் ஆஜராகியிருந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

தபால் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பு!

இன்று முதல் அனுமதி

தேசிய பூங்காக்களுக்குள் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு