உள்நாடுசூடான செய்திகள் 1

“சிறுபான்மை மதஸ்லங்களுக்கு ஆபத்தை உருவாக்கும் தொல்பொருள் திணைக்களம்” அமெரிக்கா ஆணையாளர்

(UTV | கொழும்பு) –

தொல்பொருள் திணைக்களமானது நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் அப்பிரதேசங்களிலுள்ள கட்டமைப்புக்கள் மற்றும் பௌத்த பிக்குகளுடன் இணைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வணக்கத்தலங்களைக் கைப்பற்றுவதற்கு வசதி ஏற்படுத்துகின்றது என சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, நாட்டில் வாழும் சிறுபான்மையின இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கான மீயுயர் மத சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கமானது தற்போது நடைமுறையிலுள்ள ‘ஒடுக்குமுறை’ கொள்கைகள் மற்றும் சட்டங்களை முற்றாக நீக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த ஆணையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர்களான ஸ்டீஃபன் ஸ்னெக் மற்றும் டேவிட் கெரி ஆகியோர் கடந்த மாதம் (ஒக்டோபர்) இலங்கைக்கு வருகைதந்திருந்ததுடன் கொழும்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு மத சுதந்திரம் தொடர்பில் நிலவும் கரிசனைகள் பற்றி ஆராய்ந்தனர். அதுமாத்திரமன்றி சர்வமதத்தலைவர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களையும் முன்னெடுத்திருந்தனர்.

அதன்படி, இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஆணையாளர் ஸ்டீஃபன் ஸ்னெக், ‘இலங்கையில் நிலவும் மத சுதந்திரம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் அரசாங்க அதிகாரிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாட முடிந்தமையினையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார். அதேவேளை பல்வேறு மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்கள் ஒன்றிணைந்து கீழ்மட்டத்திலிருந்து பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுத்தாலும்கூட, நாட்டில் வாழும் சிறுபான்மையின இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கான மீயுயர் மத சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கமானது தற்போது நடைமுறையிலுள்ள ‘ஒடுக்குமுறை’ கொள்கைகள் மற்றும் சட்டங்களை முற்றாக நீக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று இலங்கை அரசாங்கம் மிகவும் மோசமான பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி மத சிறுபான்மையினரைத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பது குறித்து தாம் தொடர்ந்து தீவிர கரிசனை கொண்டிருப்பதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மனசாட்சியின் கைதிகள் (இனம், மதம் சார்ந்த குறித்தவொரு தனிநபரின் கருத்துகளை அவர் வாழும் நாட்டினால் பொறுத்துக்கொள்ள முடியாததன் காரணமாக அந்நபர் கைதுசெய்யப்படல்), மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் மத சிறுபான்மையினர் போன்றோர் அரசாங்க அதிகாரிகளின் தொடர் கண்காணிப்புக்களால் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். அதுமாத்திரமன்றி தொல்பொருள் திணைக்களமானது நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் அப்பிரதேசங்களிலுள்ள கட்டமைப்புக்கள் மற்றும் பௌத்த பிக்குகளுடன் இணைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வணக்கத்தலங்களைக் கைப்பற்றுவதற்கு வசதியேற்படுத்திவருகின்றது’ எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் மற்றுமொரு ஆணையாளரான டேவிட் கெரி இதுபற்றி பின்வருமாறு கருத்துரைத்துள்ளார்:

‘குறிப்பாக தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மதவழிபாட்டுத்தலங்களை பதிவுசெய்வதில் நிலவும் சவால்களுக்கு அரசாங்கம் நிச்சயமாகத் தீர்வை வழங்கவேண்டும். வெளிப்படைத்தன்மைவாய்ந்த பதிவு செயன்முறையை உறுதிப்படுத்தக்கூடியவாறான வழிகாட்டல்களை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். அத்தோடு மட்டுமீறிய ஒடுக்குமுறைகள், கண்காணிப்புக்கள், வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்வு பேச்சுக்கள் போன்றவை பற்றி முறையிடும் மத சிறுபான்மையினரைப் வலுவான பாதுகாப்பை வழங்குமாறும் கோரிக்கைவிடுக்கின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.

கேசரி

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறப்பு

எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி – ரணில்

editor

சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்