உள்நாடு

வாக்குகளை செல்லாக்காசாக்க இடமளிக்க வேண்டாம் – ரிஷாட் [VIDEO]

(UTV|கொழும்பு)- சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி அரசாங்கத்தை உருவாக்கி, அதன்மூலம் சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும் பேரினவாதிகளின் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நமது மக்களின் வாக்குகளை செல்லாக்காசாக்கும் சதி முயற்சிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஹனீபா மதனி தலைமையில், அக்கரைப்பற்றில் நேற்று மாலை (18) இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர் தாஹிர், சட்டத்தரணி அன்ஸில் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

“முஸ்லிம்களுக்கு எதிரான குரோதப்போக்கு இன்னும் தொடர்கின்றது. சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை வீழ்த்துவதற்கு சதிகள் இடம்பெறுகின்றன. பாராளுமன்ற பிரதிநிதித்துவ வெட்டுப்புள்ளியை அதிகரிக்கின்ற கோஷங்கள் முனைப்படைந்துள்ளன. இதன்மூலம், சிறுபான்மை மக்களை தேடுவாரற்றவர்களாக மாற்றுவதே அவர்களின் உள்நோக்கம்” எனத் தெரிவித்த பா.உ ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது,

“ ‘எல்லோருக்கும் ஒரே சட்டம்’ என்ற புதிய கோஷத்துடன், காலாகாலமாக நமக்கிருக்கும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை இல்லாமலாக்க, ரத்ன தேரர் பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இவ்வாறான நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படல் வேண்டும்.

பேரினவாதிகள் தாம் நினைத்தது போன்று, பாராளுமன்றத்தில் செயற்பட நாம் வழிவிடலாகாது. சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்க இடமளித்ததோமேயானால், அவர்களின் செயற்பாடுகள் கட்டில்லாது போய்விடும். இந்த யதார்த்தத்தை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்பாவி மக்களுக்கு இதனை தெளிவுபடுத்த வேண்டும். ஏழ்மையையும் வறுமையையும் மூலதனமாகப் பயன்படுத்தி, வாக்குகளைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் செயற்பாடுகள் அரங்கேறியுள்ளன. நமது வாழ்வுரிமையையும் இருப்பையும் காப்பாற்றிக்கொள்வதற்காக, நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

‘அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்’ சமூகத்துக்கான ஒரு கட்சி. சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்ற ஒரு கட்சி. நமது சமூகத்துக்கென உருவாக்கப்பட்ட இந்த சமூகக் கட்சி, தமிழ் பேசும் மக்களுக்கான ஓர் இயக்கமாக இப்போது மிளிர்ந்துள்ளது. சகோதரத் தமிழ் மக்கள் இந்தக் கட்சியில் ஈடுபாடு கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்து வருகின்றனர். இந்தக் கட்சியின் வருகையானது குறிப்பாக, வடக்கு, கிழக்கில் உள்ள சமூகங்களுக்கிடையில் ஒரு உறவுப்பாலமாக பரிணாமம் எடுத்துள்ளது. அதேபோன்று, பேரினவாத சக்திகளுக்கு இந்தக் கட்சி சிம்மசொப்பனமாக இருப்பதனாலேயே, கட்சித் தலைமை மீது அபாண்டங்களும் வீண்பழிச் சொற்களும் சுமத்தப்பட்டு வருகின்றன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

Related posts

A/L பரீட்சைகளில் தாமதம்

சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

மீளப்பெறும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள்