உள்நாடு

சிறுத்தையின் இறப்பில் சந்தேகம் :விசாரணைக்கு குழு

(UTV | கொழும்பு) – டிக்கோயா – வனராஜா சமர்ஹில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் உயிரிழந்த சிறுத்தைபுலியின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திருமதி. சந்திரா ஹேரத்துக்கு இன்று (08) பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (07) சமர்ஹில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த குறித்த சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது.

இதனையடுத்து, சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், சிறுத்தை ஏறிய மரத்தை வெட்டியுள்ளனர்.

இதன்போது சிறுத்தையின் மீதே மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து, உரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் குறித்த சிறுத்தைபுலி உயிரிழந்தது என உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசேட விசாரணைகளுக்காக மேலதிக செயலாளர் அடங்கிய குழுவொன்று அட்டன் டிக்கோயா சமர்ஹில் தோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திருமதி.சந்திரா ஹேரத் அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

  • எஸ்.கணேசன்

Related posts

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழனன்று

மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தில் ஏற்றம்

அரச ஊழியர்களுக்கு 05 வருட விடுமுறை