உள்நாடு

சாய்ந்தமருதில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த தோணா சுத்திகரிப்பு

(UTV | கொழும்பு) –

வெள்ள அனர்த்த அபாய நிலைமையை கருத்தில் கொண்டு  அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கல்முனை மாநகர சபை   சாய்ந்தமருது பிரதேச செயலகம் சம்மாந்துறை பிரதேச சபை ஒருங்கிணைந்து சாய்ந்தமருது தோணாவை சுத்திகரிப்பு செய்யும் வேலைத்திட்டத்தை  மேற்கொண்டு வருவதுடன் இவ்வேலைத்திட்டத்திற்கு  ஒத்துழைப்பாக சம்மாந்துறை பிரதேச சபை தனது கனரக வாகனத்தை முன்வந்து  உதவியுள்ளதுடன்   இதர அமைப்புகளின் ஒத்துழைப்புடன்  இச்செயற்றிட்டம்  சனிக்கிழமை (15) ஆரம்பமானது.

2019 ஆண்டிற்கு பின்னர் 3 வருடங்களாக எவ்வித புனரமைப்பும் இன்றி குறித்த தோணா காணப்பட்டதுடன் வெள்ள அனர்த்தம் சுற்றுச்சூழல் மாசடைதல் உருவானதுடன்  மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.இதனை கட்டுப்படுத்தும் முகமாக அண்மையில் நடைபெற்று முடிந்த பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  இத் தோணா சீர் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக   அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் நேரடி கண்காணிப்பில் இன்றும் (16)  இப்பணி முன்னெடுக்கப்படுகிறது.

இவ்வேலைத் திட்டமானது இரு கட்டங்களாக நடைபெற்று வருவதுடன்   இத்தோணாவில் தேங்கியுள்ள சல்பீனியாக்களும் பொது மக்களினால் வீசப்பட்டு நிரம்பியுள்ள திண்மக்கழிவுகளும் முதல்கட்டமாக  கனரக வாகனங்களின் உதவியுடன் தோண்டி அள்ளப்பட்டு  அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.பின்னர் தோணாவின் இரு மருங்கிலும்   ஒடுங்கி காணப்படுகின்ற நிலையில்  சீரான தோணாவினை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இவ்வாறு 2019 ஆண்டிற்கு பின்னர் இத்  தோணா சுத்திகரிப்பு செய்யப்பட்டு  ஆழமாக்கப்பட்டு  வெள்ள நீர் யாவும் இத்தோணாவினால் முழுமையாக உள்வாங்கப்பட்டு  கடலுக்கு இலகுவாக  செலுத்தப்பட்டிருந்தது. இதனால் சாய்ந்தமருது பிரதேசம் மாத்திரமல்லாமல் மாளிகைக்காடு  காரைதீவு போன்ற பிரதேசங்களும் பாரிய வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த  காலங்களில் பெய்து வந்த பெருமழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வளவுகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த  பல தரப்பினர்  வெள்ள அனர்த்த பாதுகாப்புக்கான பாரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் பிரகாரம்  இன்று   தோணா- கடல் முகத்துவாரம் ஊடாக வெள்ள நீர் சீராக செல்வதற்கு  தோணாவின் சில இடங்களில் காணப்பட்ட பாரிய தடைகள் இயந்திரங்கள் மூலம்  தோண்டி அகற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறு  வெள்ள அனர்த்த பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலேயே தற்போது தோணா சுத்திகரிப்பு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு பாதுகாப்பு பொறிமுறை உருவாக்கப்படவுள்ளது.

இவ்வேலைத் திட்டத்திற்கான செலவினை  அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வர்த்தக மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஊடாக நிதி பங்களிப்பு பெறப்பட்டு  மேற்கொள்ளப்படுவதுடன்  அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட  பிரதிப் பணிப்பாளர் எம்.சி.எம்.றியாஸ்  மேற்கொண்டு வருவதுடன் சகல தரப்பினரையும் இச்செயற்திட்டத்திற்கு ஒத்துழப்பு வழங்குமாறும் மேலும்  தோணாவினை அண்டிய பகுதியில் கழிவுகள் தேங்காமல்  கல்முனை மாநகரசபையினர் பொலிஸ் சுற்றுச் சூழல் பாதுகாப்புப்பிரிவு  உரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டு சுற்றுச்சுழலுக்குத் தீங்கான முறையில் அசுத்தங்களை  வீசுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்துடன் குறித்த தோணாவிற்கு இதுவரை காலமும் எந்தவொரு அமைப்பும் உரிமை கொரப்படாத நிலையில் இத்தோணாவில் பல அபிவிருத்திகள் இடம்பெற்று வந்தன.ஆனால் இப்போது தான் அதற்கான உரிமம் அண்மையில் நடைபெற்று முடிந்த பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் இத்தோணா கொண்டுவரப்பட்டுள்ளது.அத்துடன்  இத்தோணாவினை சுத்தப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாட்டிற்கு கல்முனை மாநகர சபைக்கும் இக்கூட்டத்தில்  பொறுப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தோணா சுத்திகரிப்பு வேலைத்திட்ட மேற்பார்வை பணிகளில் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  கல்முனை மாநகர சபை மேற்பார்வை உத்தியோகத்தர் யூ.கே.காலித்தீன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

பாறுக் ஷிஹான்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 3 தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது குறித்து ஆய்வு

பொருளாதாரக் கொள்கைகள், சீர்திருத்தங்களுக்கு ஆதரவு – இலங்கைக்கு உடனடி நிதி வழங்கிய IMF

editor

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி