உள்நாடு

சாதாரண தர விஞ்ஞான வினாத்தாள் தொடர்பில் பரவிவரும் போலி செய்தி

கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த போலி அறிக்கை கீழ்வருமாறு,

இந்த ஆண்டு விஞ்ஞான வினாத்தாளானது பாடத்திட்டத்தைக் கடந்து, கேள்வி முறையில் மாற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வாக, விஞ்ஞான பாடத்திற்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் மேலதிகமாக 8 புள்ளிகள் கிடைக்கும்.

அந்ததந்த பெறுபேறுகளுக்கான மதிப்பெண்கள் 10 புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளன, மேலும் 65 புள்ளிகளுக்கு மேல் பெறும் அனைவருக்கும் திறமைச் சித்தி வழங்கப்படும்.

எனவே, மேற்கண்டவாறு போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அத்தகைய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் ஊடாக சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்கள் ஊடாக மட்டுமே செய்தி வெளியீடுகள் வெளியிடப்படும் என்று கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் ஒவ்வொரு அறிவிப்பும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கடிதத் தலைப்பிலோ அல்லது இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் கடிதத் தலைப்பிலோ, சம்பந்தப்பட்ட அதிகாரியின் கையொப்பத்துடன், முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பிறகு ஊடகங்களுக்கு வெளியிடப்படும்.

எனவே, இது போன்ற போலிச் செய்திகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் சனி, ஞாயிறு தினங்களில் திறப்பு

நாட்டை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் வெகு விரைவில் அறிமுகம்!