அரசியல்உள்நாடு

சவாலை ஏற்றுக்கொள்ளும் சக்தி சஜித்துக்கு இல்லை – அனுரவை காணவில்லை – முன்னாள் அமைச்சர் பி. ஹெரிசன்

அநுரகுமார திஸாநாயக்கவின் பொருளாதாரக் கொள்கை இறக்குமதிப் பொருளாதாரமா அல்லது ஏற்றுமதிப் பொருளாதாரமா என தெளிவாகக் கூறுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பியபோதும் அதற்கு  பதில் கூறுவதைத் தினமும் தவிர்த்து வருவதாக கூறும் முன்னாள் அமைச்சர் பி. ஹெரிசன், இது பரிசோதனைக்கான நேரம் அல்ல எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் அமைச்சர் பி. ஹெரிசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

இந்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் பி. ஹெரிசன்

அத்துடன், அநுரகுமாரவும், சஜித் பிரேமதாசவும் தாம் சிறந்த குழுக்களைக் கொண்டிருப்பதாகக் கூறினாலும், இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்ளாது நெருக்கடியான காலத்தில் ஓடி ஒளிந்தனர்.  

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. அதனால் தேர்தல் சூடுபிடித்துள்ளது. 30% – 40% மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவிற்கு வரவில்லை என பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த வாக்குகள் ஜே.வி.பி. அல்லது ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளுக்கு செல்லும் என்றால், அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தின் ஊடாக அவை ஏற்கனவே சென்றிருக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்கு முன்னர் நாட்டை முன்னேற்றுவதற்கு கடுமையாக உழைத்தார்.  

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அவர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதுவரை கடந்த இரண்டு வருடங்களாக ரணில் விக்ரமசிங்க,  இந்த நாட்டிலுள்ள மக்களை வாழவைக்கவே கடுமையாக பாடுபட்டார். எனவே இன்னும் முடிவு செய்யப்படாத வாக்குகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குத்தான் செல்லும் என்பதைக் கூற வேண்டும். 

2022இல் ஒரு மூட்டை உரத்தின் விலை 40,000 முதல் 50,000 ரூபா வரை அதிகரித்தது. அறுவடை செய்ய விவசாயிகளிடம் டீசல் இருக்கவில்லை. பயிர்ச்செய்கைக்கு களைக்கொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் இருக்கவில்லை. நாட்டில் நிலவிய பிரச்சினைகளுக்கு மாற்று வழிகளைத் தேடிய ஜனாதிபதி, அதன் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தார். 

சஜித் பிரேமதாசவிற்கு பிரதமராக பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்ட போது நான் அவர்களுடேனேயே  இருந்தேன். அப்போது, சஜித் பிரேமதாசவின் பொருளாதார நிபுணர்கள், இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்டால், உங்கள் அரசியல் இத்துடன் முடிந்துவிடும் என்று கூறினார்கள். அப்போது அந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் சக்தி, சஜித் பிரேமதாசவுக்கு  இருக்கவில்லை. 

அவரிடம் சிறந்த குழு இருப்பதாக அவர் கூறுகிறார். தனது அணி சிறந்த அணி என்று கூறப்பட்டாலும், அவரது அணியினர் சிறப்பாக செயல்பட சந்தர்ப்பம் கிடைத்த நேரம் அவர்களின் திறமையைக் காட்டவில்லை.அவர்கள் வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் சவாலை எதிர்கொள்வதைத் தவிர்த்தார்கள்.  

அப்போது அனுரகுமாரவை காணவில்லை. நல்ல அணி இருக்கிறது என்கிறார். அப்படியென்றால் இந்த நாடு வீழ்ந்தபோது பொறுப்பேற்றிருக்கலாம் அல்லவா? ஆனால் இந்த பொறுப்பை சஜித் பிரேமதாசவோ அல்லது அனுரகுமாரவோ ஏற்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக இதனைச் செய்தார். 

இன்று சஜித் பிரேமதாச விவசாயத்தைப் பற்றி உயர்வாகப் பேசுகின்றார். இப்போது விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் தருவதாக கூறுகிறார்.

ஆனால் அடுத்த போகத்தில் இருந்து ஒரு மூட்டை உரத்தை 4000 ரூபாவால் குறைக்க ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளார். அதுமாத்திரமன்றி, எதிர்வரும் பெரும் போகத்தில் இருந்து ஹெக்டேருக்கு 25,000 ரூபா வீதம் வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். 

ஜனாதிபதி ஆதரவற்ற விவசாயிகளுக்கு உதவியது மட்டுமல்லாமல், அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியதுடன் அவர்களை ஸ்மார்ட் விவசாயத்திற்கு வழிநடத்தினார். ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்னர் பிரேமதாச அமுல்படுத்திய வேலைத்திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச இப்போது குறிப்பிடுகின்றார். 

இது பரிசோதனைக்கான நேரம் அல்ல. அப்படி நடந்தால் மீண்டும் ஒரு இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். கோட்டாபய ராஜபக்ஷ அனுபவம் வாய்ந்த தலைவர் அல்ல. ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ ‘வியத்மக’ அணியைக் காட்டி என்னிடம் சிறந்த அணி இருப்பதாக கூறினார். இறுதியில் இரண்டரை வருடங்களின் பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 

அனுரகுமார திஸாநாயக்க தனது பொருளாதார வேலைத் திட்டத்தை முறையாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார். ஆனால் அனுர எப்போதும் நகைச்சுவையான ஒரு விடயத்தை கூறி அந்த சவாலைத் தவிர்க்கிறார்.  

தமது கொள்கை, இறக்குமதிப் பொருளாதாரமா அல்லது ஏற்றுமதிப் பொருளாதாரமா என்பது தொடர்பில் நேரடியான அறிக்கையை வெளியிடுமாறு ஜனாதிபதி தெரிவித்தார். அந்தக் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. 

மற்றொருவர் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் செயற்படுவதாக அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.  

அவருக்கு நாட்டின் பொருளாதாரத்தில் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்றும், தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்வதே தம்மால் முடியுமென்றும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.  

அதனைச் செய்ய அவர் அவசியமில்லை. தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில் எமது நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையை எட்டியுள்ளது.’’ என்றார். 

ஜனநாயக மக்கள் சக்தியின் செயலாளர் சமன் பத்திரன,  

“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எமது அமைப்பின் பூரண ஆதரவை வழங்க அனைவரும் தீர்மானித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டு மக்கள் வீதியில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. கடைகளில் வாங்க எந்தப் பொருளும் இருக்கவில்லை.  

மருந்து  இருக்கவில்லை. மின்சாரம் இன்றி பிள்ளைகளுடன் தவிக்கும் போது, எரிபொருள் வரிசையிலும், கேஸ் வரிசையிலும் மக்கள் எப்படி இறந்தார்கள் என்பது எமக்குத் தெரியும்.  நோய்வாய்ப்பட்ட ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத காலம் இருந்ததை இந்நாட்டு மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி, திரண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் இதை நினைவில் கொள்ள வேண்டும். பச்சை நிறத்தை விரும்புவோர் யானையை விரும்புபவர்கள், கட்சியை நேசிப்பவர்கள் எனில், எதிர்வரும் 21 ஆம் திகதி  கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

அதேபோன்று, ஐக்கிய மக்கள் சக்தியைச் சுற்றி திரண்டுள்ளவர்களில் 50%இற்கும் அதிகமானோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.’’ என்றார். 

லக்ஜன பெரமுனவின் தலைவர் சிந்தக வீரகோன், 

“இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தருணத்தில் இந்நாட்டு மக்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. 

இந்த தருணத்தில் சரியான முடிவை எடுத்தால் நாடு முன்னேறும். தவறான முடிவு எடுத்தால் நாடு எங்கே போகும் என்று யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்த நாட்டை யாரால் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை மக்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  

ஒரு நாட்டை ஆள, ஒருவருக்கு சிறப்புத் திறமையும், அறிவும் இருக்க வேண்டும். அந்த புத்திசாலித்தனமும் திறமையும் அறிவும் கொண்ட ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்பதைக் கூற வேண்டும். 

இந்த நேரத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரே தலைவர் அவர்தான். நாட்டைப் பாதுகாத்து உண்மையான அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய ஒரே தலைவர் அவர்தான் என்பது லக்ஜன பெரமுன உறுப்பினர்களின் கருத்து மட்டுமல்ல. 

 அரசியல் ரீதியாக மக்கள் பிளவுபட்டாலும், பெரும்பாலான மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து இருப்பவர்கள். அமைதியாக இருப்பவர்களின் வாக்குகள் மூலம் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. 

1977 ஆம் ஆண்டு வெளிவிவகார பிரதி அமைச்சராகவே ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன்பின், நீண்ட அரசியல் முதிர்ச்சியும், பல்வேறு அமைச்சுகளைப் பொறுப்பேற்ற அனுபவமும் கொண்ட தலைவர் அவர்.  

ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பக்குவம் கொண்ட ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. வரலாற்றில் முதன்முறையாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஒரு அசாதாரண புத்திசாலித்தனம் கொண்டவர். இன்றைய நாளை விட நாளை அவரது பெறுமதியை நாம் உணர்வோம் என்றார். 

Related posts

அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக ‘மின்சார சபை தொழிற்சங்க போராட்டம்’

மூன்றாவது அலை வௌிநாடாக இருக்கலாம் என ஆரூடம்

கராபிட்டிய வைத்தியசாலையில் 6 கொரோனா தொற்றாளர்கள் பதிவு