அரசியல்உள்நாடு

சலுகைகளுக்கும் வரப்பிரசாதங்களுக்கும் அரசியல் செய்கின்றவர்கள் எம்மிடம் இல்லை – சஜித்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் எம்மோடு இல்லை. இன, மத, குல, கட்சி பேதங்களின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக இணைந்து கொண்டவர்களே எம்மோடு இருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 58 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம். நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாகவே பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும். தொடர்ந்தும் அலறிக் கொண்டிருக்கின்ற பிரச்சினையை வைத்திருக்க முடியாது. அது நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கின்றமையால் நல்லிணக்கத்தை மையப்படுத்தி இளைஞர்களை வலுப்படுத்தும் வேலை திட்டத்தை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்.

ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்காக குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடாத்துவோம். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது. அத்தோடு வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம் என்கின்ற கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோட்டாபயவும் ரணிலும் நிறுத்திய வீட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம்.

இளைஞர்களின் தொழில் வாய்ப்பு பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிப்போம். தொழில் வாய்ப்பில்லாமல் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கின்ற இளம் சமூகத்தை அந்த அழுத்தத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் வீடமைப்பு நடவடிக்கைகளையும் மாதிரி கிராமங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தோம். கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த பின்னர் அந்த வீடமைப்பு திட்டங்களையும், மாதிரி கிராம உருவாக்கத்தையும் நிறுத்தினார். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கையை பின்பற்றியமையால் இந்த வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

நாம் தொழில் செய்கின்றவர்களுக்கே நிவாரணங்களை வழங்குவோம்.

QR CODE முறையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும், விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் எரிபொருள் நிவாரணங்களை வழங்குவோம். எரிபொருள் நிவாரணங்களை வழங்குவோம். செல்வந்தர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இந்த எரிபொருள் நிவாரணம் கிடைக்கப் பெற மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளையும் வைத்தியசாலைகளையும் மேம்படுத்துவோம்.

அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவதோடு, அனைத்து வைத்தியசாலைகளையும் சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலைகளாகவும் மாற்றுவோம். இலவச கல்வியையும் இலவச சுகாதார சேவையையும் வளமான சேவையாக மாற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவோம்.

வட கிழக்கை போன்று ஏனைய மாகாணங்களிலும் பெருந்தொகையான இளைஞர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தையும் உயர்கல்வியையும் வழங்க கூடிய வகையில் சர்வதேச தரத்திலான இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை உருவாக்குவோம். அதன் ஊடாக கணணி விஞ்ஞானம், மொழி தேர்ச்சி, தகவல் தொழில்நுட்ப அறிவு என்பவற்றை பெற்றுக் கொடுப்போம். இளைஞர்களை மேம்படுத்துவதன் ஊடாக அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

வறுமை ஒழிப்பு வேலை திட்டத்தின் ஊடாக 24 மாதங்களுக்கு வரிய குடும்பங்களுக்கு தலா 20000 ரூபா வீதம் ஐந்து பிரிவுகளுக்குள் உள்ளடங்கிய வகையில் பெற்றுக் கொடுப்போம். அதனூடாக வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். பெண்களை மையப்படுத்தி இந்த வேலை திட்டத்தை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். ஏ. சுமந்திரன், வட மாகாண முன்னாள் தவிசாளர் சி. வி. கே. சிவஞானம், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் இநநிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் அடுத்து வாரம்

இன்று அரச விடுமுறை தினம் அல்ல