(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான சர்வதேச வெசாக் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகிறது.
இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்கவுள்ளார்.
‘பௌத்த போதனைகளின் அடிப்படையில் சமூக நீதியின் மூலம் உலக சமாதானத்தை நிலைநாட்டுதல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச வெசாக் தின நிகழ்வில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்படும்.
இந்த விழாவின் நேர்முக வர்ணனைகளை மும்மொழிகளிலும் மற்றும் ஹிந்தியிலும் ஒளிபரப்பப்படவுள்ளது.
ஐநா வெசாக் தின கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் மஹாமடுவ மண்டபத்தில் இடம்பெறும். இதன்போது நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
சர்வதேச வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரமுகர்கள் ஞாயிற்றுக்கிழமை விசேட ரயில் வண்டி மூலம் கண்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். கண்டியில் புத்த பெருமானின் புனித பல் தரிசனத்திற்காக வைக்கப்படுவதோடு பெரஹராவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.