உள்நாடு

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் புதன்கிழமை (24) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதாக அறிவித்திருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சி உறுப்பினர்களுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கும் அழுத்தமான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக ஊடகக் காட்சிகளை அரங்கேற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

முழுமையான ஆட்சி அதிகாரம் இருந்தும் கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அர்த்தமுள்ள எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

உத்தேச சர்வகட்சி மாநாடு பொதுமக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் அரசாங்கத்தின் மற்றுமொரு முயற்சி எனவும் அதனால் தனது தரப்பினர் அதில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

டிசம்பருக்குள் காணிகள் விடுவிக்கப்படும் – பவித்திரா வன்னியராச்சி.

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

இலங்கைப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்கம்