உள்நாடுசூடான செய்திகள் 1

சம்பள உயர்வு: உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பொங்குவது, பட்டாசு வெடித்து பொங்கல் பொங்குவதை நிறுத்தவும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின மேடையில் அறிவித்த சம்பள தொகையை அவரால் பெற்று கொடுக்க முடிய வில்லை என்றால், அதற்கான மாற்று நடவடிக்கையை அரச தலைவராக அவர் எடுக்க வேண்டும். வர்த்தமானி பிரகடனம் செய்த தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசில் உள்ள இ.தொ.கா உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பொங்குவது, பட்டாசு வெடித்து பொங்கல் பொங்குவது ஆகிய சிறு விளையாட்டுகளை நிறுத்தி விட்டு நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். இது தொடர்பில் எமது ஒத்துழைப்பையும் கேட்டால் நாம் சாதகமாக பரிசீலிப்போம்.

ஆனால் மாற்று நடவடிக்கை என்று “தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளித்து விட்டு கம்பனிகளை போக வேண்டும்” என்ற கோஷத்தை முன்வைக்க வேண்டாம் என அரசில் உள்ள மலையக நண்பர்களுக்கு அன்புடன் சொல்கிறேன். கம்பனி போய், காணிகளை அரசாங்கம் பொறுப்பு ஏற்றால் அவை அவர்களது ஆதரவாளர்களுக்கு பிரித்து கொடுக்கபட்டுவிடும். இப்படிதான் இன்று அரசிடம் உள்ள ஜனவசம, எல்கடுவ ஆகிய அரசாங்க கம்பனி காணிகள் கேட்பாரின்றி வழங்கப்பட்டு, அங்கே வாழ்ந்த நமது மக்கள் நடுத்தெருவில் இருக்கிறார்கள்.

அப்படி நடந்தால் அது சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதை ஆகி விடும். தனியாரிடம் தோட்டங்கள் இருப்பதால் தான் காணிகள் கொஞ்சமாவது பாதுகாப்பாக இருக்கின்றன. ஆகவே, சித்திரம் வரைய முடியவில்லை என்பதற்காக சுவரை இடிக்க யோசனை கூற வேண்டாம். சம்பள கோரிக்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்கிறேன் என்று காணி உரிமையை அடியோடு அழித்து விட வேண்டாம்.

பெருந்தோட்டங்களில் வாழும் நமது மக்களின் பிரச்சினை தீர பெருந்தோட்ட துறையில் “சிஸ்டம் சேன்ச்” என்ற மீள் கட்டமைப்பை செய்ய வேண்டும். அதுதான் நாம் எப்போதும் சொல்லும் நிரந்தர தீர்வு. நாம் ஆட்சிக்கு வந்து காணி உரிமையை அடிப்படையாக கொண்டு, நமது மக்களை சிறு தோட்ட தொழில் முனைவோராக மாற்றுவோம். அதுவரை தோட்ட காணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

2019 வருடம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதும் கலந்துரையாடலின் போது, தோட்ட தொழிலாளரின் சம்பள தொகையாக அன்று ரூ. 1,000க்கு மாற்றாக ரூ. 1,500 என குறிப்பிடப்பட்டு இருந்தது. “சம்பளத்தை பற்றி பேசுவோம். ஆனால், கோட்டாபய ராஜபக்ச இதை விட பெரிய தொகையை கூறுவார். அது பற்றி எல்லோரும் பேசுவார்கள். ஆகவே சம்பளத்தை விட, தோட்ட துறையில் ‘சிஸ்டம் சேன்ச்’ பற்றி நாம் பேசுவோம்” என நான் கூறினேன். “இன்று தோட்ட கம்பனிகளை விட குறைந்த அளவு நிலபரப்பை கொண்டுள்ள சிறு தோட்ட உடமையாளர்கள்தான், தேயிலை ஏற்றுமதி வருவாயில் அதிக வருமானத்தை பெற்று தருகிறார்கள்” என்ற புள்ளி விபரத்தை நான் அங்கே எடுத்து வைத்தேன். அதன் பிறகு, தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உடைமையாளர்களாக மாற்றுவோம் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட நாம் முடிவு செய்தோம். சஜித் பிரேமதாசவும் உடன் பட்டார்.

சஜித் பிரேமதாசவின் 2019 தேர்தல் விஞ்ஞானத்தில், தோட்ட தொழிலாளிகளை, “மலையக தமிழ் விவசாயிகள்” என பெயரிட்டு, “இந்த மக்கள் விவசாயிகளாக, நிலையான வருமானம் பெற்றுக்கொள்வதற்காக, தனியார், அரச பெருந்தோட்டங்கள் மீள் கட்டமைப்பு செய்யப்படும். இந்த மலையக விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை விலைக்கு வாங்கி, தோட்ட நிறுவனங்களும், இந்த மலையக விவசாயிகளும் பங்காளர்களாகின்ற, தொழில் முறைமை உத்தரவாதம் செய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டது.

சஜித் பிரேமதாசவின் 2019 தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்றும் தேடி எடுத்து பார்த்தால் இந்த வாசகங்கள் அங்கே காணலாம். இதன் தொடர்ச்சியாகவே சஜித் பிரேமதாச “தோட்டதொழிலாளர்களை சிறு தோட்ட உடைமையாளர்களாக மாற்றுவோம்” என்ற முற்போக்கான கருத்தை இன்று மீண்டும், மீண்டும் கூறி வருகிறார். நாம் அவரை நம்புகிறோம்.

ஆகவே எங்களது அரசாங்கம் வரும்வரை இந்த தோட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளித்து விட்டு கம்பனிகளை போக சொல்ல வேண்டாம். எத்தனை பின்னடைவுகள், பிரச்சினைகள் இருந்தாலும், தனியார் கம்பனிகளிடம் இருந்தால் தான் தோட்ட காணிகள் பாதுகாக்கபடும் என்பது எனது உறுதியான நிலைபாடு என்றார்.

Related posts

அனுபவரும் ஆற்றலும் மிக்க ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – எம்.எஸ் தௌபீக்

உங்களுக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வந்ததா?

கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கைது