உள்நாடு

சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சில பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  பிரதிநிதிகள் உட்பட  பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குழுவினர்கள்   தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (09 ) அமைச்சர் மனுஷ நாணயக்காரவைச் சந்தித்தனர்.

குறிப்பிட்ட பெருந்தோட்டக் கம்பனிகள் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மறுப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அமைச்சர் தொழிலாளர் பிரதிநிதிகளிடம் விளக்கினார்.

மேலும்  இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைய சம்பளத்தை 1,350 ரூபாவாகவும், உற்பத்தி திறன் அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவை 350 ரூபாவாகவும்  அதிகரிப்பதற்காக சம்பள சபையின் மூலம் அரசாங்கத்தால்  மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பெருந்தோட்ட கம்பனிகள் ஒத்துழைப்பு நல்கவில்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அதிகரித்த சம்பளத்தை வழங்கிய நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தத்தை நீடித்து மற்றும் அதை மறுத்தவர்களின்   ஒப்பந்தத்தை நீடிக்காது இருக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகரிக்கப்பட்ட  ஆயிரம் ரூபாய் சம்பளத்தை நாளையும், நிலுவைத் தொகையான 350 ரூபாயையும் ஒரு வாரத்திற்குலும் அதன் பிறகு ஊக்கத்தொகையை வழங்குவதற்கு சில தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டாலும் தோட்டத் தொழிலாளர்கள் தற்போது அனுபவித்து வரும் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட மாட்டாது என அமைச்சர் உறுதியளித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளை கிராமங்களாக வர்த்தமானியில் வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் இக்கிராமங்களில்  வசிப்பவர்கள் பெருந்தோட்ட தோட்ட நிறுவனங்களின் பராமரிப்பு நிர்வாகத்திலிருந்து விலக்கப்பட்டு ஏனைய  கிராமவாசிகள் அனுபவிக்கும் வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் தொடர்பில் சில தொழிற்சங்கங்கள் கடைப்பிடிக்கும் இரட்டைக் கொள்கை குறித்து கவலை வெளியிட்ட அமைச்சர், அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் வருடாந்தம் பல பில்லியன் ரூபா இலாபத்தைப் பெறுவதாகத் தெரிவித்தார்.

இச் சாதகமான தலையீட்டிற்காக தோட்டத் தொழிலாளர்கள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நன்றிகளை  தெரிவித்தனர்.

Related posts

அனுர பத்திரனவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

மழையுடன் கூடிய காலநிலை

லுனுகம்வெஹர வாகன விபத்தில் 6 பேர் உயிரிழப்பு