அரசியல்உள்நாடு

சமூகவலைத்தளங்களில் அனுர வெற்றிபெற்றாலும் 21ஆம் திகதி ரணில் வெற்றி பெறுவார் – ருவன் விஜேவர்தன

சமூகவலைத்தளங்களின் செய்திகளின் மூலம் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றாலும் 21ஆம் திகதி மக்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவது உறுதியாகும்.

அதேநேரம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதி என்பதால் அமைச்சர்கள் யாரும் நாட்டைவிட்டுச் செல்ல எந்த தேவையும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21அம் திகதி இடம்பெற இருக்கும் நிலையில் சமூகவலைத்தள செய்திகள் மூலம் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் சமூகவலைத்தளங்களை பயன்டுத்திக்கொண்டு, மக்களை திசை திருப்பும் வகையில், போலியான கருத்துக்கணிப்பீடுகளை வெளியிடுவது வழமையான வியடமாகும்.

அதன் பிரகாரமே தற்போதும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் எத்தனை வாக்குகள் எடுப்பார்கள் என்பது வெளியிடப்பட்டிருக்கிறது. அதனால் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் வாக்கு எண்ணிக்கையில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெறுவார்.

ஆனால் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவது நிச்சயமாகும்.

அதனால் போலி பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாறப்போவதில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

மேலும் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறுவார் என்ற செய்தி சமூகவலைத்தளங்களின் பரவிய செய்தியை நம்பி, கடந்த ஒரு வாரமாக பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.

அதிகமான முதலீட்டார்கள் தங்களின் பங்குகளை விற்பனை செய்து வருவதாக அறியக்கிடைக்கிறது. ஏனெனில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை மாற்றுவதாகவும் அதில் இருக்கும் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படும் என்ற அச்சத்திலேயே முதலீட்டார்கள் வெளியேறுகின்றனர்.

அதேநேரம் எதிர்வரும் 21ஆம் திகதி வாக்களித்துவிட்டு வெளிநாடுகளுக்கு செல்ல 80வீதமான அமைச்சர்கள் வீசா எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்து வருகிறது.

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியாகும். அதனால் அமைச்சர்கள் யாரும் நாட்டைவிட்டுச் செல்ல எந்த தேவையும் இல்லை. ஆனால் அனுரகுமார வெற்றி பெறும் என்றால் மக்கள் நாட்டைவிட்டுச் செல்ல முயற்சிப்பார்கள். ஏனெனில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.

தேர்தல் இடம்பெற முன்னரே மக்கள் விடுதலை முன்னணி அவர்களின் உண்மையான செயலை காட்ட ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில், மக்கள் விடுதலை முன்னணி மாணவர்களுக்கும் அவர்களில் இருந்து பரிந்து சென்றுள்ள முற்போக்கு சோசலிச முன்னணி ஆதரவு மாணவர்களுக்கிடையில் இட்ம்பெற்ற மோதல் காரணமாக கால வரையறை இன்றி பல்கலைக்கழகத்தை மூடிவிடுவதற்கு அந்த நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதனால் இந்த நாட்டின் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்பட போகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இவர்கள் இவ்வாறு செயற்பட்டால், அதிகாரத்துக்கு வந்தால் இந்த நிலை தீவிரமடையும். பொதுவாக பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கிடையில் இடம்பெறும் மோதல்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியே காரணமாகும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

ஆணைவிழுந்தான் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு