அரசியல்உள்நாடு

சஜித்தை ஜனாதிபதியாக்குவதை ரணிலால் தடுக்க முடியாது – தயாசிறி ஜயசேகர எம்.பி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க முற்பட்டபோது அதற்கு ரணில் விக்ரமசிங்க அன்று தடைகளை ஏற்படுத்தி அதனை தடுத்தார்.

ஆனால் எதிர்வரும் 21ஆம் திகதி சஜித் பிரேமதாசவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவோம். அதனை அவரால் தடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தங்கல்லையில் புதன்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ளும்போது நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

ஆனால் அவரின் பலவீனமான தலைமை காரணமாக படிப்படியாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைய ஆரம்பித்தது. கடந்த பொதுத் தேர்தலுடன் பூஞ்சியத்துக்கே ஐக்கிய தேசிய கட்சி சென்றது.

இந்த நிலை ஏற்படும் என்றே இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமித்துக்கொள்ள நான் கடும் முயற்சி எடுத்தேன். அதன் பலனாக நான் கட்சியில் இருந்து வெளியேறவேண்டி ஏற்பட்டது.

அதனால் அன்று சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக்க என்னால் முடியாவிட்டாலும், இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெரும்பாலான ஆதரவாளர்களுடன் எதிர்வரும் 21ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவோம்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது 76 வயது. இன்னும்  5வருடங்களுக்கு அதிகாரத்தை கேட்கிறார்.

தற்போது அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போன்று. நடந்து செல்லும்போது சரிக்கி விழுகிறார்.

ஒரு தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டால் மீண்டும் 3தினங்களுக்கு பின்னலே அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்வார். அவரால் முடியாது. முன்னர் இருந்த பலமும் சக்தியும் தற்போது அவரிடம் இல்லை. 

இந்த தேர்தலில் இயலும் இலங்கை என்ற தொனிப்பொருளில் ரணில் விக்ரமசிங்க பிரசாரம் செய்து வருகிறார். இலங்கைக்கு முடியும் ஆனால் ரணிலால் முடியாது. அதனை அவர் நிரூப்பித்திருக்கிறார்.

1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை அவர் ஏற்கும்போது கட்சியின் வாக்கு வங்கி நூற்றுக்கு 44 வீதமாகும். 94 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.

30 வருடங்களில் தொடர் தோல்வியால் இறுதியில் தேசிய பட்டியலில் ஒரு உறுப்பினர் கிடைத்தது.

அதனையும் யாருக்கும் கொடுக்காமல் அவரே பாராளுமன்றத்துக்கு வந்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியை அவர் ஒருபோதும் யாருக்கும் கொடுக்கமாட்டர்.

மேலும், வரிசை யுகத்தை இல்லாமலாக்கியதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருகிறார். ஆனால் இன்று வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள பல நாட்களாக மக்கள் வரிசையில் இருக்கிறார்கள்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் தலையிட்டே அதனை தற்போது வழிநடத்தி வருகிறார்கள். ரணில் விக்ரமசிங்க நாட்டை கட்டியெழுப்பி இருந்தால், இளைஞர், யுவதிகள் நாட்டைவிட்டுச் செல்ல ஏன் வரிசையில் இருக்க வேண்டும் என கேட்கிறேன் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

ரஞ்சன் எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை

பொதுப் போக்குவரத்து சேவைக்கான வழிகாட்டல் கோவை வெளியானது