அரசியல்உள்நாடு

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்

அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல், கடந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் கஷ்டப்பட்ட போது அதனைக் கண்டுகொள்ளாமல் ஓடியதற்காக சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கேகாலையில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற ரணிலால் இயலும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதிக்கு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து, மக்கள் வாழக்கூடிய நாட்டை தானே உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மக்களின் எதிர்காலத்தை ஒன்று வழங்குமாறு கோரும் அரசியல்வாதிகளுக்கு வழங்கும் சந்தர்ப்பம் இதுவல்ல என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அன்று மக்கள் கஷ்டப்பட்ட போது இவர்களில் யாரும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி மக்கள் படும் துன்பத்தையும், மாணவர்களை பாடசாலை அனுப்ப முடியாமல் தவித்ததையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் வந்து நீலிக் கண்ணீர் வடித்தாலும் அன்று ஒளிந்து கொண்டனர். நாடு கஷ்டத்தில் இருக்கும் போது மக்களை கைவிட்ட சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் அளித்து வாழ்வதற்கான நம்பிக்கையை நான் ஏற்படுத்தினேன். இன்று நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் சுமையை படிப்படியாக குறைத்து வருகிறோம்.

அதற்காக கடந்த தடவை நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினோம். உர நிவாரணம் வழங்கப்பட்டது.

ஓய்வூதியம் மற்றும் முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டது. ஒரு பக்கம் பொருட்களின் விலையைக் குறைக்கும் அதேவேளை, மறுபுறம் பணத்தைக் கொடுத்து மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் பணியை செய்து வருகிறோம்.

அடுத்த ஆண்டுக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை குறையும். நான் மேடையில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் நபரல்ல. பொறுப்பை நிறைவேற்றிய பின்னர் அதனை மக்களுக்கு அறிவிக்கிறேன்.

எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் தொடர்பில் யாருக்காவது கொடுப்பதா அல்லது நிரந்தர எதிர்காலத்திற்கு செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று திசைகாட்டி கோருகிறது. அவர்களின் பட்ஜெட் ஊடாக அனைத்து IMF நிபந்தனைகளும் மீறப்படுகிறது.

நிபந்தனைகளை உடைத்து, IMF ஆதரவை இழந்த பிறகு, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரிவடையும். அதேபோல், பொருளாதாரப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்று நான் கேட்ட கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.

அவர்களிடம் திட்டம் எதுவும் இல்லாததால் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை. திட்டுவதை மட்டுமே செய்கின்றனர். ஆனால் மக்களின் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும்.

எனவே மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தாமல் உண்மையைப் பேசுமாறு சஜித்திடமும்அநுரவிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னோக்கி செல்லும் பாதையை நாம் காட்டியுள்ளோம். அந்த பாதையில் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டை வெற்றிபெற செய்ய அனைவரும் செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

சமன் லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கண்டித்து இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்

நினைவுத் தூபிக்கான அடிக்கல் மீளவும் நாட்டப்பட்டது