அரசியல்உள்நாடு

சஜித்திற்கே வாக்களியுங்கள் – தமிழரசுக்கட்சி உயர்மட்டக்குழு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான தீர்மானம் மிக்க உயர்மட்ட கலந்துரையாடல் வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன்,சி.சிறிதரன், செயலாளர் ப.சத்தியலிங்கம், முன்னாள் மட்டுமாநகரசபை மேயர் சரவணபவன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் தமிழரசுக்கட்சியின் தீர்மான அறிக்கை கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவால் வாசிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டன. இத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களின் பொருளாதார மேம்பாடு பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விஞ்ஞாபனங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்குதலும் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவதும் ஆகும். ஒற்றையாட்சி மற்றும் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதனவாகும்.

அதற்குப் பதிலாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பின் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பது பிரதானமாகும்.

முக்கியமாக இவ்விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக ஆகியோருடன் நேரடியாக பேச்சுக்கள் நடைபெற்றன.

தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இணைப்பாட்சி அடிப்படையிலான சமஷ்டிக் கட்டமைப்பில் முழுமையான தன்னாட்சி சம்பந்தமாக தொடர்ந்து போராடி வந்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொருட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்கான பிரேரணை முன்வைக்கப்படுதல் வேண்டும்.

தமிழ்ப் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லீம் சமூகத்துடனும் மலையக தமிழர்களுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும். 13ஆவது அரசியல் திருத்தம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சிக்குட்பட்டது. இதனை அரசியல் தீர்வாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இருப்பினும் தமிழினத்தின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடையும் வரை இந்திய அரசின் நட்புறவுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நடைமுறையிலிருக்கும் மாகாண அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

2002 டிசம்பரில் ஏற்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் காணப்பட்டது. அக்கோட்பாடு பின்வருமாறு அமைந்தது. இந்த வரலாற்று நிகழ்வு இன்றும் பரிசீலனைக்குரியது.

“ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல் என்பதாகும். சர்வதேச நியமங்களின் படியும், சர்வதேச சாசனங்களின் படியும் தமிழர்களாகிய நாங்கள் தனிச்சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம்.

ஒருமக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகிறோம். 2015 இல் இலங்கை வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13இல் இலங்கையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார்.

“எமது சமூகத்திலுள்ள அனைத்துப் பாகங்களின் அபிலாசைகளுக்கு நாம் மதிப்பளிக்கும் போது எம்நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் சக்திகளையும் எமதுநாடு உள்வாங்கிக் கொள்ளும். மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்களை இவ்வாறு வலுவூட்டும் பொழுது நாடு மென்மேலும் மேம்படும் கூட்டுச் சமஷ்டியில் நான் திடமான நம்பிக்கை கொண்டவன்” என்பதையும் குறிப்பிட்டார்.

“இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு அரசிடம் அல்ல என்பதை நாம் வலியுறுத்துகிறோம். “ஜனாதிபதித் தேர்தல் முடிந்தபின் எங்களால் சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்புக்கான அறிக்கையில் குறிப்பிடப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கான அரசியல் தீர்வை அடைவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண வெற்றிபெறும் ஜனாதிபதியுடனும் அரசுடனும் வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.” தமிழ்த்தேச மக்கள் அரசியல் தீர்வைத் தீர்மானிப்பதிலும் அந்த இலட்சியத்தை அடைவதற்கும் இடர்களோ முரண்பாடுகளோ ஏற்படாமல் நல்லெண்ணத்துடன், ஒற்றுமை உணர்வுடன் தேர்தலின் போதும், எதிர்காலத்திலும் ஒன்றாக நின்று உழைப்போம் என திடமான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறோம்.’

இந்த நோக்கத்தை நாடளாவிய ரீதியில் செயல்படுத்துவதற்கென நாம் கடந்த காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் எமது பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தோம்.

ஆனால் பெரும் ஏமாற்றங்களும், வெறுப்பும், வேதனைகளுமே எஞ்சியுள்ளன. இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம்.

இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது.

எனவே, 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பின் போது ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என அன்புடன் கோருகின்றோம் என்றுள்ளது.

இதேவேளை இன்றையதினம் கலந்துகொண்ட ஆறு உறுப்பினர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாத்திரம் குறித்த தீர்மானத்திற்கு இணக்கப்பாடு தெரிவிக்காதநிலையில் ஏனைய ஐவரும் தமது இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்வெட்டுக்கான புதிய அட்டவணை

இன்றைய வானிலை

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை