சூடான செய்திகள் 1

சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை, அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

(UTV|COLOMBO) பயங்கரவாதச் செயல்பாடுகள் எதிலும் தனக்கு எவ்வித தொடர்புமில்லையெனவும் தன்னுடைய சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவில்லையெனவும் தெரிவித்த ரிஷாட்பதியுதீன் இது அப்பட்டமான பொய்யென மறுப்புத் தெரிவித்தார்.

 

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் மேலும் தெரிவித்ததாவது,

 

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவத்தை வைத்து சில வங்குரோத்து அரசியல்வாதிகள் ஆதாயம் தேட முனைகின்றனர்.

 

இஸ்லாத்துக்கு மிக நெருக்கமான மார்க்கத்தவர்களான கிறிஸ்தவ சகோதரர்கள், படு பயங்கரவாத கயவர்களால் கொல்லப்பட்ட வேதனையின் விளிம்பில் இருக்கும் எங்களது சமூகத்துக்கு  இவ்வாறானவர்களின் வீண் குற்றச்சாட்டுக்கள் மேலும் கவலையளிக்கிறது.

 

தெமட்டகொடை இப்ராஹிம் ஹாஜியாருடன் தனிப்பட்ட தொடர்புகள் எதுவும் எனக்கில்லை. வர்த்தகரான ஒருவரான இப்ராஹிம் என்பவர் கொழும்பு வர்த்தக சங்கத்தலைவர் என்ற வகையில் என்னை அவரது சங்கத்துடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில்  என்னைச் சந்தித்துள்ளார். இதை விட எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை.

 

இந்த சந்திப்பை வைத்தே என்னையும்.எனது சகோதரர்களையும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்த சிலர் பெரும் பிரயத்தனங்களை முடுக்கி விட்டுள்ளனர்.

 

குறிப்பிட்ட வர்த்தகரான வர்த்தகருக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, ஜீ எல் பீரிஸ், பிய சேனகமகே, முன்னாள் பிரதமர் ரட்ணசிரி விக்கிரமநாயக்க விருதுகளை வழங்கியுள்ளனர். ஆனால் அந்த புகைப்படங்களை வைத்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. நான் முஸ்லிம் என்ற காரணத்தினாலேயே என்னை குறி வைத்து கேவலாமான இந்த வேலையை ஊடகங்கள் மேற்கொள்கின்றன. ஊடகங்களுக்கு தார்மீகப் பொறுப்பு இருக்க வேண்டும்.  நெருக்கடியான இந்த கால கட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரும் இரகசிய பொலிஸாரும் தீவிர விசாரணையை நடத்தி வரும் வேளையிலே ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற பொறுப்பற்ற, மக்களின் உணர்ச்சிகளை தூண்டுகின்ற பரபரப்பான செய்திகளை வெளியிட்டு நாட்டு மக்களை அச்சத்துக்கு உள்ளாக்குகின்றன.

 

எனது அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபையின் வர்த்தக நடவடிக்கைகள் சட்ட நியதிக்கு உட்பட்டு ஒழுங்குமுறையிலே இடம்பெறுகின்றது. தொழிற்சாலைகளுக்கு தேவையான சில மூலப்பொருட்களையும் கைத்தொழில் அபிவிருத்தி சபை  வழங்கி வருகின்றது. இந்த நிறுவனம் எனது அமைச்சின் கீழ் வருவதால் சில விடயங்களை வைத்துக்கொண்டு இதிலும் என்னை குறிவைப்பது வேதனையானது. நிறுவனத்தின் தலைவர் ஒரு பெரும்பான்மையின சமூகத்தவர். அவர் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் இந்த பிரச்சாரத்தை மேலும் முடுக்கிவிட்டு என்னை உச்சகட்ட அபகீர்த்திக்குள்ளாக்கியிருப்பர்.

 

முன்னாள் அமைச்சர் எஸ்பி திசாநாயக்க, விமல் வீரவன்ச ஆகியோரே இந்த அப்பட்டமான பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

ஜனநாயக விரோத அரசை குறுக்கு வழியில் அமைக்க முயற்சித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்கா போன்றோர் இந்தத் துயரமான சம்பவத்தை அரசியல் பழிதீர்க்கப்பார்க்கிறார்.பலமுறை என்னை அழைத்தும் சட்டவிரோதமான் அந்த அரசை அமைக்க நான்  இணங்காததாலேயே அவர் இவ்வாறான கொக்கரிப்புக்களை செய்கின்றார்.

 

இஸ்லாத்தில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை, தற்கொலைக்கு இடமில்லை, கொலைக்கும் இடமில்லை, முஸ்லிம்கள் இந்த அக்கிரமங்களுக்கு ஒத்துழைப்பும் வழங்குவதில்லை, எனவே இந்த பயங்கரவாதிகளை அழித்து ஒழிப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். எங்கள் மீது வீண்பழி சுமத்தி வேதனையில் வாழும் எங்களுக்கு மேலும் மேலும் துன்பங்களை தர வேண்டாம் என வங்குரோத்து அரசியல்வாதிகளிடமும் சில ஊடகங்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

 

 

-ஊடகப்பிரிவு

 

 

 

Related posts

திஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ விபத்துச் சம்பவம்

வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி

சிறுமியை திருமணம் முடித்த நபருக்கு விளக்கமறியல்