கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர், இலங்கையில் அதிகளவான இறப்புகள் காசநோய் காரணமாகவே பதிவாகியுள்ளதாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின்
விசேட வைத்திய நிபுணர் சமன் கபிலவன்ச தெரிவித்தார்.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண சுகாதார திணைக்களம், இரத்தினபுரி காசநோய் வைத்திய பிரிவு, இரத்தினபுரி போதனா வைத்தியசாலை என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காசநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் நேற்றையதினம்(24) இரத்தினபுரி மாநகர சபை வளாகத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்போது இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இருந்து இரத்தினபுரி மாநகர சபை வரை காசநோய் விழிப்புணர்வு நடைபயணமும் இடம்பெற்றது.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் சமன் கபிலவன்ச,
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காசநோயே காரணமாகும்.
நாட்டில் இதுவரை சுமார் பத்தாயிரம் காசநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆனால் உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படாத நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் சுமார் பதினான்காயிரம் (14,000) என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சமூகத்தில் சுமார் 4,000 காசநோயாளிகள் சரியான சிகிச்சையைப் பெறவில்லை என்று மருத்துவர்களாகிய எங்களால் கூற முடியும்.
இது சமூகத்துக்கும், சுகாதாரத் துறைக்கும் பெரும் சவாலாக இருக்கின்றது.
இலங்கையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவான காசநோயாளிகள் காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் சமன் கபிலவன்ச மேலும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன,
காசநோய் மட்டுமல்ல, எல்லா நோய்களையும் தடுப்பது மிகவும் முக்கியமானதாகும்.
ஆண்டும் ஒன்றுக்கு சுமார் 100,000 பேர் காசநோயால் இறக்கின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஐம்பது சதவீதமானோர் உயிரிழப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வளர்ந்துவரும் சமூகங்களுக்கு இதுபோன்ற பேரழிவு ஏற்பட முக்கியக் காரணம் சரியான சிகிச்சை கிடைக்காத காரணமாகும். மனித சமுதாயம் இந்த அவலத்தை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியமே மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது முழு உண்மை என ஆளுநர் தெரிவித்தார்.
காசநோய் என்பது காற்றில் பரவும் ஒரு பாக்டீரியா ஆகும்.
காசநோயாளி இருமல், தும்மல், சிரிப்பு, பேசும்போது நோய் பரவுகிறது.
இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல், இரவில் லேசான காய்ச்சல், பசியின்மை, எடை குறைவு, வயிற்று வலி, இரவில் அதிக வியர்வை, சளியுடன் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை காசநோயின் அறிகுறிகளாகும்.
இவ்வாறு ஏற்படுமாயின் மார்பு மருத்துவமனை அல்லது அரச மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து உங்களுக்கு இந்நோய் உள்ளதா என்பதைச் சரிபார்த்து கொள்ளலாம்.
06 மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் காசநோய் முற்றிலும் குணமாகும் எனவும் மேற்படி இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தின்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதன்போது காசநோய் தொடர்பான இரத்தினபுரி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் காசநோய் தடுப்பு குறித்து நேற்றைய தினம் வீதி நாடகங்கள், விழிப்புணர்வு சொற்பொழிவுகள் என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன, இரத்தினபுரி சுப்ரகமுவ செயலாளர் கே.ஜி.பாஸ் நிஷாந்த, சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஷமேதனி மாதரஹேவே, சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனோஜ் ரொட்ரிகோ,இரத்தினபுரி மார்பு மருத்துவ மனையின் பிரிவின் வைத்தியர் சந்திரகிர்த்தி குணரத்ன, விசேட வைத்திய நிபுணர் திலினி முத்துக்குமாரண, வைத்தியர் புந்திக ரணசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி