ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநாகரசபை மேயர் வேட்பாளராகக் களமிறங்க நான் விரும்பவில்லை. அதற்கு மிகப் பொறுத்தமானவர் எரான் விக்கிரமரத்னவே.
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், அவரது பெயர் இதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
திங்கட்கிழமை (10) கொழும்பு மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைத் தொகுதியில் தேசிய மக்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
ஆனால் தற்போது சென்று அப்பிரதேசங்களிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் அவர்களது நிலைப்பாடுகளைக் கேட்றிந்தால், தமது முடிவு எந்தளவுக்கு தவறானது என்பதைக் கூறுவர்
கடந்த ஆட்சியாளர்கள் மீது காணப்பட்ட கோபத்தினாலேயே அவர்கள் இவ்வாறு வாக்களித்தனர். ஆனால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அவ்வாறு ஊர், பெயர் தெரியாதவர்களை தெரிவு செய்ய முடியாது.
அது பொறுத்தமானதாக இருக்காது. தமக்காக சேவை செய்தவர்களை அல்லது செய்யக் கூடியவர்களையே தெரிவு செய்ய வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பெண்னொருவர் மாநகர மேயர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது.
எவ்வாறிருப்பினும் அவருக்கு போட்டியாக எமது கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன களமிறக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அவர் இந்த பதவிக்கு மிகப் பொறுத்தமானவராவார். கொழும்பு மாநகரசபை என்பது சாதாரணமானதொரு இடம் அல்ல. நான் கொழும்பு மாநகரசபைக்கு உரித்துடையவள் அல்ல.
எனவே நான் மேயர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு எதிர்பார்க்கவுமில்லை. அவ்வாறு அந்த தெரிவிற்கு செல்வதானால் கடுவலை தொகுதி அமைப்பாளர் பொறுப்பினை கைவிட்டுச் செல்ல வேண்டியேற்படும்.
நான் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்தால் பொதுத் தேர்தலில் எனக்கு ஆதரவளித்தவர்கயை அநாதரவாக விட வேண்டியேற்படும்.
அதனை நான் விரும்பவில்லை. அதேவேளை சகல தகைமைகளுடன் உள்ள எரான் விக்கிரமரத்னவே இதற்கு மிகத் தகுதியானவர் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.
-எம்.மனோசித்ரா