சூடான செய்திகள் 1

கொழும்பு மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதில் அனைத்து தரப்பினரும் கரிசனைகாட்ட வேண்டும் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

(UTV|COLOMBO) கொழும்பு மாவட்ட மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் கரிசனை செலுத்த வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வத்தளை ஹுணுபிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மூன்று மாடிக்கட்டிடத்தையும் கனிஸ்ட பிரிவுக்கான மூன்று மாடிக்கட்டிடத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வில் (24) சிறப்பு விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க முதலமைச்சரின் நிதியில் 5 1/2 கோடி ரூபாசெலவில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.ஹலீலின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போதுகூறியதாவது,

கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வித்தரம் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகையின் கிட்டத்தட்ட அதே அளவையே அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் சனத்தொகை கொண்டுள்ளது. இருந்த போதும் அந்த மாவட்டம் கல்வியிலே உச்ச நிலையில் இருப்பது சிறப்பானது.மகிழ்ச்சி தருகின்றது . கொழும்பு மாணவர்கள் கல்வியில் கரிசனை காட்டுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் வழிகாட்டலும் தேவைப்படுகின்றது.

மேல் மாகாண முதலமைச்சர், கல்விக்காக எந்த விதமான பேதமும் இன்றி உதவியளித்து வருவது பாராட்ட வேண்டியது. அதே போன்று எமது கட்சியின் முக்கியஸ்தரான மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் கொழும்பு மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு படுகின்றார். தேர்தலில் அவர் வழங்கிய பிரதான வாக்குறுதியும் அதுவேதான். அதே போன்று எமது கட்சி சார்பாகவும் அவரிடம் நாம் விடுத்த முக்கிய வேண்டுகோளும் கல்வி தொடர்பானதுதான். அவரது அரியபணிகளுக்கு நாங்களும் உதவி வருகின்றோம். எமது கட்சியை

பொறுத்த வரையில் கொழும்பிலே அவர் மாகாணசபை உறுப்பினரானமை எங்களுக்கு கிடைத்த வரமாகும். சின்னஞ்சிறிய நமது நாட்டிலே இன, மத பிரதேச வேறுபாடுகள் இனியும் வேண்டவே வேண்டாம்.

30 வருட அழிவில் நாம் பட்டது போதும். இனியும் எம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. சிங்கப்பூரை நாம் ஒரு முன்னுதாரணமாக கொள்ளவேண்டும். முன்னொரு காலத்திலே சிங்கப்பூர் தலைவர்கள் இலங்கையை முன்னுதாரணம் காட்டிய வரலாறு இருந்தது. அந்த நிலை இன்று தலைகீழாகமாறி அவர்கள் உச்சாணிக்கு சென்று விட்டனர். பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளின் தலா வருமானங்களும் எம்மை விஞ்சிவிட்டன.

எனவே நாம் வேறுபாடுகளை மறந்து, பிறந்த நாட்டை நேசிக்க வேண்டும். சிறிய சிறிய பிரச்சினைகளுக்காக அடிபட்டுக்கொண்டிருக்காமல் இந்த நாட்டை கட்டியெழுப்புவதன் மூலமே பொருளாதர வளர்ச்சியிலே முன்னேற்றம் காண முடியும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய , மாகாண சபை உறுப்பினர்களான ஜோர்ஜ் பெரேரா , சாபி ரஹீம், சமூக சேவகர் ஹுசைன் உட்பட கல்வி அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

 

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

ரணில் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் : அமைச்சர் மனுஷ

இன்று நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும்