உள்நாடு

கொழும்பு தேசிய வைத்தியசாலை: நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு Cefuroxime என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊசி மருந்த போடப்பட்ட பின்னர் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் 31 வயதுடைய ஆண் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவர் குமார விக்கிரமசிங்கவிடம் “அத தெரண” வினவியது.

குறித்த நபரின் மரணம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை செலுத்தியதால் மரணம் நிகழ்ந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பதை விசாரணைகள் ஊடாக கண்டறிய முடியும் என பணிப்பாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உயிரிழந்த நோயாளிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தின் வகை, ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் குமார விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு HRC அழைப்பு

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக சஞ்சீவ முனசிங்க நியமனம்

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி