உள்நாடு

“கொள்கைப் பிடிப்பிலேயே மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டேன்”

(UTV|கொழும்பு) – கொள்கை ரீதியாக அரசியலை செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காகவும் தூயநோக்கிலுமே, ரிஷாட்
பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தான் இணைந்துகொண்டதாகவும் பதவியை சொகுசுசையும் விரும்பியிருந்தால், கட்சியின் தலைவர் அமைச்சராக இருந்தபோதே, இணைந்திருக்க முடியும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அக்கட்சியின், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மாஹிர் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட பின்னர், கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“நாங்கள் பல கட்சிகளில் ஒன்றாக அரசியலில் பயணித்தவர்கள். கொள்கை வேறுபாடு காரணமாக வெவ்வேறு முகாம்களில் இருந்துவிட்டு, தற்போது உண்மையையும் சத்தியத்தையும் உணர்ந்துகொண்டதனாலேயே இக்கட்சியில் இணைந்துகொண்டோம். சமுதாயத்துக்கு உண்மைக்கு உண்மையாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால், மக்கள் காங்கிரஸே பொருத்தமான, மிகவும் சரியான களம் என்பதை அடையாளங்கண்டுள்ளோம். நாங்கள் மாத்திரமல்ல, மக்களும் இந்தக் கட்சியையே அடையாளப்படுத்துகின்றனர்.

எனது பிரதேசமான சம்மாந்துறை மக்களும், சிவில் அமைப்புக்களும், படித்தவர்களும் என்னிடம் சில விடயங்களை எத்திவைத்தனர். “நீங்கள் நேர்மையான ஒருவரே, ஆனால், நீங்கள் இருக்கும் இடம் எங்களுக்கு விருப்பம் இல்லை” எனக்கூறுவர். அத்துடன், “ரிஷாட்டின் மயில் கட்சியில் போய்ச்சேருங்கள்” என்று ஏழைத் தாய்மார்கள் கூட என்னிடம் கூறியிருக்கின்றனர். அந்தளவு மக்கள் மனங்களிலே இந்தக் கட்சி ஆழப்பதிந்து, குடிகொண்டிருக்கின்றது.

கடந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளை முதன்முறையாக பெற்றிருந்தது. பின்னர், 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அந்த மாவட்டத்தில் சுமார் 40,000க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, கணிசமான பிரதிநிதித்துவத்தையும் பெற்றது. கட்சியின் வளர்ச்சிக்கு இது ஒரு சான்று. அதிகமானவர்கள் இப்போது மக்கள் காங்கிரஸின் நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு, கட்சியுடன் வந்து இணைந்து கொண்டிருக்கின்றனர்.

எந்த சந்தர்ப்பத்திலும் எந்த சபையிலும் எழுந்து நின்று, தைரியமாக பேசக்கூடிய சூழலை இந்தக் கட்சி எனக்கு ஏற்படுத்தித் தரவேண்டும். இதுவே எனது வேண்டுகோள். கூனிக்குறுகி நின்று, அரசியல் செய்பவனாக நான் இருக்க விரும்பவில்லை.

நீண்டகாலமாக இந்தக் கட்சியின் செயற்பாடுகளை அவதானித்த பின்னரே, தீர்க்கமான இந்த முடிவை எடுத்தேன். கட்சியின் தலைவர் அதிகாரத்தில் இருந்தபோது, நான் இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தால், சிலரின் பார்வை வேறுவிதமாக இருந்திருக்கும். திணைக்களத்தின் தலைவராகவோ, பணிப்பளராகவோ ஆக வேண்டுமென்ற ஆசையிலேயே, இந்த முடிவை நான் எடுத்தேனென்ற அபச்சொல்லுக்கு ஆளாகியிருப்பேன். சரியான நேரத்தில்

சரியான முடிவை எடுத்திருக்கின்றேன் என்ற திருப்தி, இப்போது எனக்கு இருக்கின்றது. கட்சியின் வளர்ச்சிக்காக உண்மையாகவும் விசுவாசத்துடனும் என்னை அர்ப்பணித்து செயலாற்றுவேன். குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக முடிந்தளவு அர்ப்பணிப்பேன்” என்றார்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், கொழும்பில், இன்று (04) இடம்பெற்ற இந்த நிகழ்வில், செயலாளர் சுபைர்தீன், தவிசாளர் அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கொள்கைப்பரப்புச் செயலாளர் ஜவாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான அன்சில், மக்கீன், ஜுனைதீன் மான்குட்டி, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரின் முக்கிய ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு –

Related posts

அடுத்தது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அதிக வாய்ப்பு.

editor

வெற்றிலைக்கேணி கடலில் ஒன்பதுபேரை கைது செய்த கடற்படை

சம்பள உயர்வு தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை –  ரமேஷ் பத்திரண