கேளிக்கை

கைதி படத்தின் 2 வது பாகத்தை எடுக்க தடை

(UTV |  சென்னை) – கார்த்தி நாயகனாக நடித்த கைதி படத்தின் 2 வது பாகத்தை எடுக்க தடை விதித்து கேரளாவில் உள்ள கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி.தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது .

கைதி படத்தை தெலுங்கு உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை சிலர் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் 2வது பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனை கேள்விப்பட்ட கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ராஜீவ் என்பவர் கொல்லம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் தான் கடந்த 2004 ம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன்.அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்து, ஜீவகந்தி என்ற மலையாள பெயரில் ஒரு கதையாக எழுதியதாக தெரிவித்திருக்கிறார்.

பின்னர் புழல் சிறையில் இருந்து விடுதலையாகி கேரளா திரும்பிய ராஜீவ் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்துள்ளார்.

அப்போது அந்த ஹோட்டலில் சினிமாகாரர்கள் அதிகமாக தங்குவார்கள் என தெரியவந்தது. அங்குதான் சினிமா தயாரிப்பாளர் ராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது.அதன் பின்னர் அவர் மூலம் கைதி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர். பிரபுவுடன் பழக்கம் ஏற்பட்டது.2007 ல் எஸ்.ஆர். பிரபுவை நேரில் சந்தித்து தன்னுடைய கதையை கொடுத்ததாக மனுவில் கூறியிருக்கிறார் .

தன்னுடைய கதையை படமாக தயாரிப்பதாக கூறி தனக்கு அப்போது எஸ்.ஆர்.பிரபு ரூ. 10 ஆயிரம் அட்வான்சாக கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் கைதி படம் தயாரிப்பது பற்றி தனக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ள கதையின் சொந்தக்காரர், சமீபத்தில் தொலைக்காட்சியில் வெளியான போதுதான் அதை பார்த்து அறிந்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய கதையின் ஒரு பகுதியை வைத்துத் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டது தெரியவந்ததாக கூறியுள்ளார்.தற்போது தன்னுடைய மீதி கதையை வைத்து இந்த கைதி படத்தின் 2வது பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் மனுதாரர்.

மேலும் முதல்பாகத்தை பல மொழிகளில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.ஆகவே கைதி படத்தின் 2 வது பாகத்தை தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் ராஜீவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த கொல்லம் நீதிமன்ற நீதிபதி ஜெயகுமார் கைதி படத்தின் 2 வது பாகத்தை தயாரிக்கவும், மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு,தங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப் பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைதி படம் தொடர்பாக ஊடகங்களில் தங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுக்கவோ சட்டப்படி அதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என விளக்கம் அளித்திருக்கிறார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யோகி பாபுவிற்கு போட்டியாக பிரியங்கா சோப்ரா?

மீண்டும் திரைக்கு வரும் காட்ஸிலா?

டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் ரஷ்யாவுக்கு திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தியது