கேளிக்கை

கைதான நடிகர் திலீப்புக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

(UDHAYAM, COLOMBO) – பாவனா கடத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், கொச்சி அங்கமாலியில் நீதிபதி முன் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார்.

எனவே காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்பில்லை.

மேலும், நீதிமன்ற காவலை தொடர்ந்து, திலீப் ஆலுவா சிறையில் அடைக்கப்படுகிறார்.

மலையாள நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப், நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பாவனா, கடந்த பிப்ரவரி 17-ம் திகதி கொச்சி அருகே கிராமத்தில் படப்பிடிப்பு முடிந்து இரவில் காரில் திரும்பிக்கொண்டு இருந்தபோது, வழியில் காரை மறித்து ஏறிய 3 பேர், பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.

பாவனாவின் புகாரின்பேரில், கார் ஓட்டுநர் மார்ட்டின் முதலில் கைது செய்யப்பட்டார். வடிவால் சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் ஆகிய இருவரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

கார் ஓட்டுநராக பாவனாவிடம் வேலை பார்த்த பெரும்பாவூரைச் சேர்ந்த சுனில்குமார் இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

அவருடன் மணிகண்டன், விஜீஸ் ஆகியோரையும் பொலிஸார் தேடி வந்தனர். இவர்களில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் கைது செய்யப்பட்டார்.

நடிகர் திலீப், அண்மையில் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் குறித்து, இத்திருமணத்துக்கு முன்னதாகவே, திலீப்பின் முதல் மனைவி மஞ்சுவாரியரிடம், பாவனா எச்சரித்ததாகவும், அதனால், திலீப் பாவனா இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தனது பட வாய்ப்புகளைத் திலீப் தடுத்து நிறுத்துவதாக, பாவனாவே ஒரு பேட்டியில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தற்போதைய கொச்சி சம்பவத்துடன், இந்த விவகாரம் முடிச்சு போடப்பட்டு, கேரளாவில் பரபரப்பானது.

ஆனால், பாவனாவுக்கு ஆதரவாக கேரள திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற திலீப், ‘பாவனாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இப்பிரச்சினையில் மலையாள திரையுலகினர் எடுக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்பேன்என அறிவித்தார்.​

ஆனால், நடிகை பாவனாவைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காணொளி காட்சிகள் அடங்கிய நினைவக அட்டை பிடிபட்ட பின்னர், வழக்கு விசாரணையில் தனிப்படை ஐஜி தினேந்திர கஷ்யப் தலைமையிலான பொலிஸார் துரிதமாக ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த தகவலின் அடிப்படையில் நடிகர் திலீப் மீதான சந்தேகம் வலுத்தது.

மேலும் இயக்குநர் நாதிர்ஷா, நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன், அவரது தாய் ஷியாமளா ஆகியோர் மீதும் பொலிஸார் விசாரணையைத் துரிதப்படுத்தினர்.

இதனிடையே நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் திலீப்பிடம் கேரள பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

தீபிகா கவர்ச்சி வெள்ளோட்டம்…

ரஜினியுடன் இணையும் த்ரிஷா மற்றும் அஞ்சலி

‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் அதிர்ச்சியில்