அரசியல்உள்நாடு

கொடுங்கோலனின் நிழலில் வளர்ந்தோரை பாதுகாக்கும் ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் – ரிஷாட் எம்.பி

கொடுங்கோலன் கோட்டாவின் நிழலில் வளர்ந்த கூட்டத்தை பாதுகாக்கும் ரணிலைத் தோற்கடிப்பதற்கு, முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் திங்கட்கிழமை (26) நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தென்னிலங்கை உன்னிப்பாக அவதானிக்கிறது. அரசியலை குடும்பச் சொத்தாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை கபளீகரம் செய்த கும்பலைத் தோற்கடிக்க பெரும்பான்மை மக்கள் என்றோ தயாராகிவிட்டனர். எனவே, சிறுபான்மைச் சமூகங்களும் இவ்விடயத்தில் ஒன்றுபட வேண்டும்.

பேரினவாதிகளின் முகவர்களாக, இங்குள்ள ஒரு சிலர் களமிறக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது. கிழக்கு மக்கள் ஒன்றுபட்டுவிட்டதாக ஒரு மாயையைக் காட்டி, தென்னிலங்கையை மட்டுமல்ல முழு நாட்டையும் இவர்கள் மீண்டும் ஏமாற்றத் துடிக்கின்றனர்.

பணத்தை வாரியிறைத்து, பஸ்களில் மக்களை கூட்டி வந்து, இவர்கள் காட்டும் மாய வித்தைகள் பலனளிக்காது. ஒருவருக்கு ஐயாயிரம் ரூபா வழங்கப்படுகிறதென்றால், எவ்வளவு பணத்தை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர் என்பதை கணக்கிட்டுப்பாருங்கள்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது, முஸ்லிம்களின் ஆத்மாக்கள் அலறித்துடித்தன. மத உணர்வுகள் பறிக்கப்படுவதாகவும் ஈமான் இழக்கப்படுவதாகவும் வேதனையடைந்தோம். ஆனால், அமைச்சர் அலிசப்ரி எதையும் கண்டுகொள்ளாமல் கொடுங்கோலன் கோட்டாவுடன் கூட்டுச்சேர்ந்தார். இவர்தான், இன்று கிழக்கு மாகாணத்துக்கு வந்து, ரணிலுக்கு வாக்களிக்கக் கோருகிறார்.

கோட்டாவின் எஞ்சியகால ஆட்சியில் சுகம் அனுபவிக்கும் ரணிலுக்கு வழங்கப்படும் வாக்குகள், இஸ்லாமிய இறை நம்பிக்கைக்கு எதிரானவை. இதைப் புரிந்துகொள்ளுங்கள். அமைச்சர் அலிசப்ரிக்கும் இதைப் புரியவையுங்கள்.

இனவாதம் மற்றும் மதவாதத்தை தூக்கிப்பிடித்தாடிய சில பௌத்த துறவிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய ஆட்சியையும், அதே அமைச்சரவையையும் மன்னிக்கவே முடியாது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு இவர்களது இனவாத மற்றும் மதவாத திமிர்த்தனங்களே காரணமாகின. வெறுப்பூட்டும் பேச்சுக்களால் சமூகங்களை மோதவிட்டவர்களை பாதுகாத்த ஆட்சியையும் அமைச்சரவையையும் விரட்டியடிக்கத் தயாராகுங்கள். சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் இவை எதுவும் நடக்காது. இவ்வாறு பேசுவோரைத் தண்டிக்க விசேட ஆணைக்குழுவை நியமிக்குமாறு நாம் கோரியுள்ளோம்.

எனவே, எங்களது நிலைப்பாட்டைப் பலப்படுத்தவும் ஏஜெண்டுகளைத் தோற்கடிக்கவும் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.

-ஊடகப்பிரிவு

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இறக்குமதியாகிய இந்திய என்ஜின்களில் கோளாறு

“பெண்களை காதியாக நியமிப்பதை ஏற்கப்போவதில்லை” சட்டத்தரணிகளான சரீனா மற்றும் ஷிபானா