உள்நாடு

கூலித்தொழிலாளருக்கு நிவாரணம் வழங்குமாறு ரிஷாட் வேண்டுகோள்

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுவதனால், நாளாந்தத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் உழைப்புக்கு வழியின்றி முடங்கி இருப்பதனால், அவர்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை வழங்க, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சித் தலைவர் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை (24) அலரிமாளிகையில், கொரோணா அனர்த்தம் தொடர்பாக ஆராயும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மக்களின் கஷ்டங்கள் தொடர்பில் பலவிடயங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் இருப்பதால் அன்றாடம் கூலிக்கு வேலை செய்து பணம் சம்பாதிக்கும் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்றனர். எனவே, இவர்களின் விடயத்தில் அரசாங்கம் உடன் கவனம் செலுத்த வேண்டும். பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள் ஆகியோரின் மூலம் இந்த வறிய தொழிலாளர்களை  இனங்கண்டு, பாதுகாப்பு படையினரின் உதவியுடன், அவர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும் சேவைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்..

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இயங்கி வந்த 14 சதொச நிறுவனங்கள் அண்மைக்காலமாக மூடப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. எனவே, இந்த நிறுவனங்களை மீளத்திறந்து, தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், பாவனையாளர்களின் நுகர்வுக்கு வழிவகுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதுமாத்திரமின்றி, கடற்றொழிலாளர்கள் பிடிக்கும் மீனை விற்பனை செய்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமெனவும், விவசாய விளை பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை சந்தைப்படுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

Related posts

தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

பேச்சுவார்த்தை மிகவும் வினைத்திறனாக அமைந்தது

வத்தளையில் நீர் விநியோகம் தடை