(UTV | கொழும்பு) – ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விசா பெறுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 19 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த உள்நாட்டுப் போரில் ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 30 இலட்சம் அகதிகள் உள்ளதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு விசா வழங்குவதை பாகிஸ்தான் அரசு கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்தது.
தற்போது கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தான் மீண்டும் விசா வழங்க ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் ஜலாலாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கடந்த வாரம் முதல் விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காக நேற்று அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான மக்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மைதானத்தில் திரண்டனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டதில் 11 பெண்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்று கூறப்படுகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
