வகைப்படுத்தப்படாத

குழப்பத்திற்கு தூபமிடும் டிலந்தவை உடன் கைதுசெய்யுங்கள் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

(UDHAYAM, COLOMBO) – பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரரைக் கைதுசெய்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனவும் நாட்டிலே பாரிய குழப்பங்கள் உருவாகுமென்றும் அடிக்கடி கூறி வரும் அவ்வியக்கத்தின் தலைவர் டிலந்த விதானகேயை பொலிஸார் உடன் கைதுசெய்து, சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில பொலிஸில்; முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டுவரும் ஒருவரை கைதுசெய்ய வேண்டாம் என டிலந்த பிரச்சாரங்களை மேற்கொள்வது சட்டத்தையும், நீதியையும் கேலிக்கூத்தாக அவர் நினைப்பதையே நிருபிக்கின்றது.

யாரையும் கைதுசெய்ய வேண்டாமென்று பொலிஸாரையும் நீதிமன்றத்தையும் எந்தவொரு பிரஜையும் பலவந்தப்படுத்த முடியாது. சட்டம் தனது கடமையை உரிய முறையில் மேற்கொள்வதற்கு எந்தவொரு பிரஜையும் இடைஞ்சலாக, அதற்கு குறுக்கீடாக செயற்பட்டாலும் அவருக்கெதிராக முதலில் நடவடிக்கை எடுப்பதன் மூலமே சட்ட ஆட்சியை வலுப்படுத்த முடியும். மாறாக குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் கருத்துச் சொல்வது, கோரிக்கை விடுப்பது, பலவந்தப்படுத்துவது சட்டத்துக்கு முரணான செயலாகும்.

ஒரு நாட்டிலே சட்டம் ஒழுங்கு இல்லையென்றால் அது காட்டரசாங்கமாகவே மாறவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும்.

ஞானசாரதேரர் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருந்தவர். அளுத்கம இனக் கலவரம் தொடர்பில் அவருக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இருக்கின்றன. சிறையில் இருந்த ஒருவரை மீண்டும் இன்னுமொரு குற்றச் செயலுக்காக கைதுசெய்தால் நாட்டிலே எவ்வாறு இரத்த ஆறு ஓட முடியும்? ஞானசாரரை பாதுகாப்பதற்காக ஒரு கூட்டம் வெறுமனே ஒரு மாயையை ஏற்படுத்தி பீதி ஒன்றை உருவாக்க நினைக்கின்றனர். சட்டத்தின் முன் எல்லோரும் சமனே. வேண்டுமெனில் ஞானசாரர் தவறு இழைக்காமல் தண்டிக்கப்பட்டால் அல்லது கைதுசெய்யப்பட்டால் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று அடிப்படை மனித உரிமை வழக்கு தாக்கல் செய்து, நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும். இதனை விடுத்து வீதிகளில் தமது சண்டித்தனத்தை காட்டிக்கொண்டிருக்க கூடாது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாமல் ஒளிந்து இருக்கும் அவரை கைதுசெய்தால் இரத்த ஆறு ஓடுமென கூறிவரும் விதானகே, ஏதோ ஒரு உள்நோக்கத்திலேயே இவ்வாறு கதைக்கின்றார். இரத்தக் களரி ஒன்றை உருவாக்கி நாட்டில் ஏதோ ஒரு குழப்பத்தை ஏற்படுத்த இந்த இயக்கம் முஸ்தீபுகளை செய்து வருவதன் பிரதிபலிப்பாகவே இதனைக் கருத வேண்டியிருக்கின்றது. எனவே தயவுதாட்சணையின்றி டிலந்த விதானகேயும், அவருடன் சார்ந்தவர்களும் கைதுசெய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். (Courtesy – rb.lk)

Related posts

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்…

ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்?

පාසැලේ ගසකට නැගි සිසුවාට වුණු දේ