குறைந்த விலைக்கு விற்க வேண்டிய எரிபொருள் ஏன் கூடிய விலைக்கு விற்கப்படுகின்றது…! அரசின் வாக்குறுதிகள் எங்கே..? நேற்றைய முன் தினம் பாராளுமன்றத்தில் 05.03.2025. இரா சாணக்கியன் உரையாற்றி இருந்தார்.
உண்மையில் எனக்கு முன்னர் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நமக்கு பின்னால் அமர்ந்திருந்தாலும் அவர் எதிர்க்கட்சியில் அல்ல அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்.
இந்த பக்கம் அமர்ந்திருந்ததால் நீங்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களது உரையை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
நீங்கள் பேசியதை 5ஆம் ஆண்டு மாணவர்கள் முன்னிலையில் பேசியிருந்தால் அது உகந்ததாக இருந்திருக்கும். மின்சக்தி அமைச்சரின் செய்தி ஒன்று ‘தி மோர்னிங்’ பத்திரிகையில் அண்மையில் வெளியாகியிருந்தது. அதில் தற்போது நிலவும் காலநிலைக்கு அமைய இந்த வருடத்தின் நடுப்பகுதியளவில் மின்சார வழங்கலில் சிக்கல் நிலை ஏற்படலாம் என அமைச்சர் அல்ல இ.மி.ச. பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இது அவசர மின்சார கொள்வனவு ஒப்பந்தத்திற்கு செல்லும் திட்டமோ தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறித்து இங்கு குறிப்பிட வேண்டும். அவர் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் நிலையும், குழுவும் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவும் வேறு. ஆனால் அவரது செயற்பாட்டை பாராட்ட வேண்டும்.
அவர் பெரும் பணியாற்றி இருந்தார். ஆனால் அவர் ஆற்றிய பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த ஆளுங்கட்சி அரசாங்கம் ஒரு விடயத்தை முன்னெடுத்து செல்கிறது என்பதை எனக்கு முன்னர் பேசிய உறுப்பினருக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
நான் இதை கூறுவதற்கு பிரதான காரணம். முதலில் எரிபொருளில் தொடங்கினால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் உள்ளார். எனவே கடந்த அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
நீங்கள் மக்களுக்காக முன்னிற்பதாக இருப்பின் புதிய ஒப்பந்தங்களுக்கு செல்லலாம். ஆனால் அவ்வாறு செய்யமாட்டீர்கள். ஏனென்றால் பிரசார மேடைகளில் நீங்கள் கூறிய அனைத்தும் பொய்.
அரைவாசிக்கு மேல் பொய்யான வாக்குறுதிகளே வழங்கப்பட்டன. அந்த பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமையினால் நாம் கடந்த அரசாங்கத்தின் ஒப்பந்தங்களின் கீழேயே செல்ல வேண்டும் என தற்போது கூறுகின்றனர்.
கடந்த அரசாங்கத்தில் குறைந்த விலைக்கு எரிபொருளை வழங்கக் கூடிய போதிலும் அதிக வரிகளை விதிப்பதனாலும் அரசியல்வாதிகளுக்கு கமிஷன் தொகை வழங்குவதனாலும் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதாக செப்டம்பர் 21இற்கு முன்னர் ஜனாதிபதியின் கட்சி விமர்சித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜனவரி மாத விலை சூத்திரம் என்னிடம் உள்ளது. அதற்கமைய பெட்ரோல் 298.85 ஆனால் ஜனவரி மாதம் 309 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பத்து ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டீசல் 15 ரூபாய் அதிகமாக விற்கப்பட்டுள்ளது. 270 ரூபாய்க்கு வழங்கக்கூடிய டீசலை 286 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். அப்படியென்றால் இதில் யார் திருடி இருக்கிறார்கள். அமைச்சரா? எமது மேம்பட்ட கலாச்சாரம் தேசிய மக்கள் சக்தியினர் தேசிய மக்கள் சக்தியினரை பார்த்துக் கொள்வர்.
நான் நோய்வாய்ப்பட்டால் எமது கட்சி எம்மை பார்த்துக் கொள்ளும். அதனாலேயே எமது சம்பளத்தை நாம் கட்சிக்கு வழங்குவதாக நீதி தொடர்பான அமைச்சர் குறிப்பிட்டார். அதிலுள்ள மேம்பட்ட கலாச்சாரம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. நோய் வாய்ப்பட்டால் காப்புறுதி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அப்படி இல்லை என்றால் சேமிப்பு ஒன்றை பராமரித்து மாத சம்பளத்தில் ஒரு தொகையை அதில் சேமியுங்கள். கட்சி வந்து மருந்து வாங்கி தரும்வரை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டாம்.
தற்போது எரிபொருள் விலையை குறைக்க கூடிய வாய்ப்பு இருக்கின்ற போதிலும் அதிகவிலைக்கு விற்பனை செய்வது இந்த மேம்பட்ட கலாச்சாரத்தை அபிவிருத்தி செய்வதற்கோ தெரியவில்லை.
அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வது உங்களது மேம்பட்ட கலாச்சாரத்தின் கீழ் அமைச்சர்கள் திருடுவதற்கா அல்லது கட்சியை கட்டியெழுப்புவதற்கா? அதனால் பொய் பிரசாரங்களின் மூலம் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.
எதிர்க்கட்சி கேள்வி எழுப்புவதற்கு காரணம், நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. இன்னொன்று கேட்கின்றேன். எதிர்காலத்தில் பெட்ரோல் விலையை குறைக்க முடியும் என அமைச்சரவை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என இந்த பத்திரிகையில் பொறியியலாளர் தம்மிக்க குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை.
அமைச்சர் குமார ஜயகொடி: அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டதையும் பொறியியலாளர் குறிப்பிட்டதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். அவர் மின்சார பட்டியல் குறித்து குறிப்பிட்டிருக்கலாம்.
அப்படியென்றால் பெட்ரோல் பற்றி குறிப்பிடுங்கள். 289 ரூபாய்க்கு விற்கக் கூடியதை ஏன் 309 ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள்.
அமைச்சர் குமார ஜயகொடி: நீங்கள் அந்த விலை சூத்திரத்தை சபையில் முன்வையுங்கள் நாங்கள் அது குறித்து பதிலளிக்கின்றோம். பத்திரிகைகளுக்கு விலை சூத்திரத்தை அமைக்க முடியாது. இது எமது விலை சூத்திரம் அல்ல.
இதனை சபையில் முன்வையுங்கள் நாம் பதிலளிக்கின்றோம் என அமைச்சர் குறிப்பிடுகிறார். இதனை சபையில் முன்வைத்து எக்காலத்தில் பதிலை பெறுவது. 15.1 சதவீதம் வருவாய் இருக்க வேண்டும் என ஐ.எம்.எஃப்.
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் எப்படி விலையை குறைப்பது? குறைக்க முடியாது. அனைத்தும் பொய். தற்போதுள்ள பிரச்சினை இந்த அரசாங்கம் பொய் கூறி ஆட்சிக்கு வந்தமையே.
அவ்வாறின்றி வேறு பிரச்சினை இல்லை.
இலங்கை மின்சார சபையின் நூறின் 70 வீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றும் வேலைத்திட்டமொன்று கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டது.
கௌரவ அமைச்சர் அவர்களே, உங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த காற்றாலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அது சரியா தவறா எனக்கு தெரியவில்லை. அதில் அதானி திட்டமும் ஒன்று. அதானி திட்டத்திற்கு எதிராக சூழலியலாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதானி திட்டத்தை நிறுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியால் தற்போது நாட்டுக்கு நேர்ந்துள்ள நட்டத்தை நோக்க வேண்டும்.
அதானி என்ற பெயரை நீக்கிவிட்டு பாருங்கள். இலங்கைக்குள் ஒரு பில்லியன் டொலர் முதலீடு ஒன்று. ஒரு பில்லியன் டொலர் முதலீட்டை அதானி மாத்திரமல்ல ஏனைய தனியார் காற்றாலை திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு இலங்கைக்குள் டொலர் சம்பாதிக்க முடியாது. வெளிநாட்டிலிருந்து அந்த டொலரை கொண்டு வர வேண்டும்.
இலங்கைக்குள் காணியிலிருந்து அனைத்தையும் அந்த தனியார் துறையினர் தேடிக் கொள்ள வேண்டும். இவ்வாறான நிலையில் நாம் சாதாரணமாக கணக்கு பார்த்தால் எரிபொருளிலிருந்து 4 அலகுகளை தயாரிக்க ஒரு லீற்றர் அவசியம்.
அதனை ஏற்கின்றீர்களா எனக்கு தெரியவில்லை. அதனடிப்படையில் நோக்கினால் சோலாரின் மூலம் ஒரு மெகாவொட் ஊடாக 4000 அலகுகளை ஒரு நாளுக்கு வழங்க முடியும். 100 மெகாவொட் ஒரு வேலைத்திட்டத்தை அங்கீகரித்திருந்தால் 2 இலட்சம் வீடுகளுக்கு மின் வழங்கலை வழங்க முடிந்திருக்கும்.
தற்போதைய செலவுகளுடன் பார்க்கும் போது எந்த அடிப்படையில் இதனை நிறுத்தியுள்ளீர்கள் என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. கடந்த கால வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நிறுத்துவதாக இருப்பின் அது தெளிவாக கமிஷன் தொகையை மாற்றியமைக்கும் நடைமுறையாகவே இது செய்யப்படுகிறது.
0.08 சதத்திற்கு ஒரு அலகை வழங்குவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போது, இ.மி.ச. இணைந்து தான் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. அதாவது அதானி திட்டம் வெளியேறியுள்ளது என்பது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வெளியில் சென்றுள்ளது.
தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமையவே எந்தவொரு மாற்று திட்டங்களும் இன்றி இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டன. 2030ஆம் ஆண்டளவில் எமது நாட்டிற்கு தேவையான எரிசக்தி வழங்கலை பெற்றுக் கொள்வதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக கிடைக்கவிருந்தவற்றை நீங்கள் எந்தவொரு மாற்று திட்டமும் இன்றி நிறுத்தினீர்கள். அப்படியென்றால் அனல் மின்சக்தியையே கொள்வனவு செய்ய நேரிடும்.
இன்றேல் மின்சார தடையை மேற்கொள்ள நேரிடும். அனல் மின்சக்திக்கு செல்லும் போது கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினை தான் இதில் இலஞ்ச ஊழல் இடம்பெற்றது என்பது. அப்படி என்றால் இன்னும் அவ்வாறான இலஞ்ச ஊழல்கள் இடம்பெறுகின்றனவா? நான் தனிப்பட்ட ரீதியில் யார் மீதும் சேறு பூச விரும்பவில்லை.
எனவே நான் பெயர்களை குறிப்பிட போவதில்லை. நிதி மோசடியினால் பதவி நீக்கப்பட்ட ஒருவரே இந்த முன்வரிசையில் அமைச்சராக அமர்ந்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோதே அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் இந்த சபையினுள் முக்கிய பொறுப்பில் இருக்கும் போது எமக்கு சந்தேகம் எழுவது சாதாரணமான விடயம். எனவே அவசர மின்சார கொள்வனவு ஒப்பந்தத்திற்கு சென்றால் அதன் மூலம் யாராவது நன்மையடைய முடியும். ஏனெனில் கட்சியை அபிவிருத்தி செய்வது தங்களது மேம்பட்ட கலாச்சாரம் என நீதி அமைச்சரும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கட்சியின் தேர்தல் நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு மக்களின் பணத்தை கொள்ளையிடும் செயற்பாட்டை இந்த அரசாங்கமும் முன்னெடுக்கின்றது என்ற முடிவிற்கு நாம் இதன்மூலம் வரலாம். அது தவறில்லை. தற்போதைய நிலைமையின் அடிப்படையிலேயே நாம் அவ்வாறு குறிப்பிடுகின்றோம்.
அடுத்ததாக சோலார் பனல் பொருத்தியவர்களுடன் இதுவரை மின்சார கொள்வனவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. கடந்த அரசாங்கம் செய்யவும் இல்லை. இந்த அரசாங்கம் செய்ய எதிர்பார்த்துள்ளதா என்றும் தெரியாது.
இந்த அரசாங்கத்தின் கொள்கை மின்சார பட்டியலை குறைப்பது என்றால் இந்த சோலார் மூலமான உற்பத்தியை அதிகரியுங்கள்.
இன்றேல் காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரியுங்கள். ஆனால் அவ்வாறான எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை. இந்த பாராளுமன்றத்தில் வாய்ப் பேச்சு மாத்திரமே. அதற்கு 159 பேர் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர்.