அரசியல்உள்நாடு

கிளீன் ஸ்ரீலங்கா – 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு வழங்கிய ஜப்பான்

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா) அன்பளிப்பை வழங்கியுள்ளது.

இதற்கமைவான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (03) ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் பாராளுமன்ற உப அமைச்சர் இகுஇனா அகிகோ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரால் கைசாத்திடப்பட்டது.

இந்த அன்பளிப்பின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் கழிவு முகாமைத்துவத் திறனை மேம்படுத்துவதற்காக கழிவுப் போக்குவரத்துக்காக 28 கம்பெக்டர் வாகனங்கள் வழங்கப்படும், அதில் 14 வாகனங்கள் மேல் மாகாணத்திற்கும், 08 வாகனங்கள் கிழக்கு மாகாணத்திற்கும், 06 வாகனங்கள் வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்படும்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் காரணமாக உலக நாடுகளின் முதலீடுகள் இலங்கையை நோக்கி வருகின்றதென சுட்டிக்காட்டிய, ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள் தொடர்பிலான பாராளுமன்ற உப அமைச்சர் இகுஇனா அகிகோ, தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஜப்பானிய பிரதமரின் வாழ்த்துச் செய்தியையும், உப அமைச்சர் இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வழங்கினார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த ஜப்பானிய அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டம் எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என வலியுறுத்திய ஜனாதிபதி, ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தமைக்காகவும், கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் வழங்கிய ஆதரவிற்கும் ஜப்பானிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், அதிகளவான இலங்கைத் தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கிய ஜப்பானிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அந்த வாய்ப்புகளை மேலும் அதிகரித்துக்கொள்ள ஒத்தழைப்பு வழங்குமாறும், இலங்கையின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த தலையீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

Related posts

பேரூந்து ஒழுங்கை சட்டம் மீள் அமுலுக்கு

இலங்கையில் 8 வது மரணமும் பதிவு

ஜப்பானிய நிதியுதவி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

editor