சூடான செய்திகள் 1

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்

(UTV|COLOMBO) கிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

இவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை பகிர்ந்தளிப்பதை துரிதப்படுத்துவதற்காக இன்று முதல் கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழுக் கூட்டம் இன்று (18) முற்பகல் விளிம்புல, ஹேனேகம பிரதேசத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.

நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் சிறிய வியாபாரங்களை பதிவு செய்யும் போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய நிகழ்ச்சித்திட்டமாக கிராமசக்தி மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போது கிராமிய வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இலக்காகக்கொண்டு இத்திட்டம் செயற்திறமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கிராமிய மற்றும் நகர மட்டங்களில் பெருமளவான மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அம்மக்களை இலக்காகக்கொண்டு 2019ஆம் ஆண்டிற்குரிய திட்டங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் இங்கு விளக்கினார்.

இதேநேரம் 2019ஆம் ஆண்டு கிராமசக்தி மக்கள் இயக்கம் கொழும்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக 117 மில்லியன் ரூபா நிதி ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்திற்கு 117 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் அதிக வறுமை நிலவும் மாவட்டமான களுத்துறை மாவட்டத்திற்கு 216 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து நிதி ஏற்பாடுகளும் குறித்த பிரதேசங்களிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உரிய முறையில் செலவிடுவது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் கடந்த இரண்டரை வருடகால அனுபவத்துடன் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை இவ்வருடம் மிகவும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டில் அனைத்து மக்களினதும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு இவ்வருடம் அனைவரும் கூட்டாக தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவது மிக முக்கியமாகும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து இன்று இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், உற்பத்திகளுக்கான விற்பனை நிலையங்கள் தொடர்பான பிரச்சினைகள் மக்களிடமுள்ள பிற்போக்கான கருத்துக்களை நீக்கி அவர்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர்களினால் மாவட்டங்களின் கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றியும் எதிர்கால நிகழ்சித்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிப்பது கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மற்றுமொரு நோக்கமாகும். அந்த வகையில் இன்று இரண்டு கிராமசக்தி சங்கங்களுக்கிடையே ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

இதன் மூலம் அவிசாவளை புவக்பிட்டிய தெற்கு கிராமசக்தி சங்கம் இதுவரை முகங்கொடுத்த சில முக்கியமான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இங்கு சுமார் 40 விவசாயிகள் பல்வேறு வகையான கீரை வகைகளை உற்பத்தி செய்கின்றனர். எனினும் வருடத்தில் சில காலப்பகுதிகளில் இந்த உற்பத்திகளை விற்பனை செய்வதில் பல தடைகள் உள்ளன. இன்று இந்த சங்கத்திற்கும் லங்கா “ஹெலஒசுபென்” கிராமசக்தி சங்கத்திற்கும் இடையில் இந்த கீரை உற்பத்திகளை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதற்கு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் ஜோன் அமரதுங்க, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, லசந்த அழகியவன்ன, ஹர்சன ராஜகருணா, மேல் மாகாண ஆளுநர் அஷாத் சாலி, மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் மேல் மாகாண கிராமசக்தி கிராமிய நிகழ்ச்சித்திட்டம் இன்று ஜனாதிபதி அவர்களின் தலைமையில் கம்பஹா, தொம்பே வல்அரம்ப உற்பத்தி கிராமங்களை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

தொம்பே பிரதேச செயலாளர் பிரிவில் வலஅரம்ப, ஹேனேகம “அபிமன்” கிராமசக்தி மக்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 08 மாதங்களாகின்றன. இப்பிரிவில் 185 குடும்பங்களில் 75 குடும்பங்கள் கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் இணைந்துள்ளனர்.

இக்கிராமத்தின் வீதிகள் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஏற்பாடுகளை கொண்டு கொங்றீட் இடப்பட்டுள்ளது. கிராமசக்தி சங்கங்களின் மூலம் சிறிய குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் கிராமத்தின் முக்கிய வருமான வழிகளாகவுள்ள உற்பத்திகளை உற்பத்தியாளர்கள் பலப்படுத்தியுள்ளனர்.

வல்அரம்ப “அபிமன்” கிராமசக்தி மக்கள் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி, சுமுகமாக கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

அவர்களுக்கு 185 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார அபிவிருத்திக்கான உபகரணங்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

Related posts

ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டம் எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 25ம் திகதியன்று பிரதமருக்கு

பாலஸ்தீன வீடுகளை இடிக்க தொடங்கியது இஸ்ரேலிய படைகள்