உள்நாடு

காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களின் அகால மரணம் ஆறாத்துயரை ஏற்படுத்துகிறது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

காரைதீவு – மாவடிப்பள்ளியில் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிந்தவூர், காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களின் அகால மரணம் ஆறாத்துயரை ஏற்படுத்தியுள்ளது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நிந்தவூரிலிருந்து சம்மாந்துறைக்குச் சென்ற அரபுக் கல்லூரி மாணவர்கள் பயணித்த உழவு இயந்திரம், வௌ்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், உயிர்நீத்த மாணவர்கள் மற்றும் சாரதி, உதவியாளர் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாத விதி, மனிதனுக்குப் பொதுவானதே. மரணம் எல்லோரும் ஏற்றுக்கொண்ட விதிதான். இருந்தாலும், இது நிகழும் சந்தர்ப்பங்கள் மற்றும் நேரங்களே எம்மைக் கவலைக்குள்ளாக்குகின்றன.

பிள்ளைகளை இழந்து துயருறும் பெற்றோர்களுக்கு, இறைவன் அமைதி மற்றும் பொறுமையை வழங்கட்டும்! எதிர்காலத்தில், பிரபல உலமாக்களாக உயர்ந்து, சமூகத்தை நல்வழிப்படுத்தவிருந்த இளம் பிஞ்சுகள், இந்த அனர்த்தத்தில் நம்மை விட்டுச் சென்றுவிட்டன. இறைவனின், ஏற்பாடுகளைப் பொருந்திக்கொள்வதே உறுதியான ஈமான்.

நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தால் பலரும் இடர்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த அவலங்களிலிருந்து மீள்வதற்கு இறைவனைப் பிரார்த்திப்போம்.

அத்துடன், வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ள ஏனையோரின் குடும்பத்தினருக்கும், இந்த சந்தர்ப்பத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும், நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்ட சகலருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தொடர்ந்தும் துரித வேகத்தில் செயற்பட்டு, நிர்க்கதிக்குள்ளான மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயற்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-ஊடகப்பிரிவு

Related posts

லிற்றோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது!

வன்முறையை உருவாக்கிய தலைவரிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

editor

சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைப் பிரதிநிதிகள் புறப்பட்டனர்