நமது நாட்டில் முக்கியமான துறையான விவசாயம், நீர்ப்பாசனம், காணி, கால்நடை அபிவிருத்தி துறைக்கான குழுநிலை விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த காலம் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் நமது நாட்டு விசாயிகளுக்கு எதிராக செயற்பட்ட காரணங்களால் ஆட்சியிலிருந்து மாற்றப்பட்ட வரலாற்றை நாம் கண்டு கொண்டோம்.
எனவே, புதிய அரசாங்கம் எமது நாட்டில் வாழும் விவசாயிகளுக்கான நல்ல விடயங்களை செயற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் .
இன்று சபையில் உரையாற்றிய பிரதி அமைச்சர் நாமல் குமார நமது நாட்டில் நெல்லின் விலையை உச்ச விலைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
அதற்காக உங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆனால், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அறுவடை நடைபெற்ற போது அரசாங்கம் நெல்லின் உத்தரவாத விலையினை அறிவிக்கவில்லை இதனால் வடக்கு கிழக்கு மாகாண விவசாயிகள் நஷ்டத்தினை எதிர்நோக்கினர் எனத் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த மகாபோகம் நெல் அறுவடை முடிந்த வேலையில் நெல்லுக்கான நிர்ணய விலையினை அரசாங்கம் அறிவித்தது.
இதனால் குறிப்பாக அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதுடன், குறைந்த விலையில் நெல்லினை விற்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.
எனவே எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அறுவடை நடைபெறுவதற்கு முன் நெல்லின் உத்தரவாத விலையினை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
இது விடயமாக விவசாய, நீர்ப்பாசன, காணி, கால்நடை அமைச்சர் லால்காந்த பதிலளிக்கையில்,
நெல்லின் உத்தரவாத விலையை அரசாங்கம் அறிவிப்பதற்கு முன் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒரு கிலோ நெல்லின் விலை 140 ரூபாய்க்கு விவசாயிகள் விற்பனை செய்தனர்.
இந்த விலை குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே அரசாங்கம் ஒரு கிலோ நெல்லிற்கு 120 ரூபாய் விலையினை அறிவித்ததாக பதில் அளித்தார்.
எமது பிரதேசத்தில் விவசாயிகள் குறைந்த விலையில் நெல்லினை விற்றனர். தேவையெனில் எமது பிரதேச விவசாயிகளை உங்களிடம் அழைத்து வருகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறித்த அமைச்சருக்கு பதிலளித்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் ஆமவெட்டுவான், வேகாமம், துக்வெல, கச்சிக்கொடி தீவு, தாராம்பளை, கிரான்கோவை பிரதேசங்களில் அமைந்துள்ள விவசாயிகளின் காணிகளுக்குள் 30 வருட வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற யுத்த சூழ்நிலையில் விவசாயிகளால் தங்களின் காணிகளுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த அரசாங்கமும் ரணில் விக்கிரமசிங்கவும் பொத்துவில் பிரதேச விவசாயிகளின் விவசாய காணிகளை விடுவித்து தருவதாக வாக்குறுதி வழங்கி வாக்குகளை பெற்று ஏமாற்றிவிட்டனர்.
எனவே, புதிய அரசாங்கம் உண்மைக்கு உண்மையான விவசாயம் செய்யப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இது போன்று தான் வட்டமடு காணி பிரச்சினையும் நீண்ட காலமாக தீர்வு கிடைக்காமல் உள்ளது. வட்டமடு பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் விவசாயிகள் உள்ளனர்.
அதேபோல் கால்நடை உரிமையாளர்கள் தமிழ் முஸ்லீம் மக்கள் உள்ளனர். தமிழ் முஸ்லீம் மக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும்.
அண்மையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வட்டமடு பிரதேசத்தில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான 300 ஏக்கர் காணிகளை விவசாயம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு, பின்னர் இடைநிறுத்தப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, வட்டமடு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகளை விவசாய அமைச்சு மேற்கொள்ள வேண்டும். கடந்த அரசாங்கம் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்க்காமல் இழுத்தடிப்பு செய்ததுடன் விவசாயிகளையும் ஏமாற்றியுள்ளனர்.
எனவே, புதிதாக ஆட்சியினை பொறுப்பெடுத்த நீங்களும் காலம் தாழ்த்தாது விவசாயிகளின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என மக்கள் சார்பில் கேட்டுக்கொண்டார் .
இன்று பாராளுமன்றத்தில் ஒரு முக்கியமான விடயத்தினை நான் தெரிவிக்க விரும்புகின்றேன், பாராளுமன்றத்தின் கௌரவத்தினை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எல்லோரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்.
கடந்த அரசாங்க காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 225 பேரையும் மக்கள் நிராகரிப்பதாக தெரிவித்தனர் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது.
கடந்த அரசாங்க காலத்தில் நமது நாட்டில் இனவாதம் விதைக்கப்பட்ட நிலையில் இருந்தன. பாராளுமன்றத்தில் இனவாத செயற்பாடுகள் குறைந்த நிலையில் இருந்தன.
இன்று நமது நாட்டில் இனவாதச் செயற்பாடுகள் குறைந்துள்ளது ஆனால், பாராளுமன்றத்தில் இனவாத செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறித்து நாம் எல்லோரும் கவலைப்பட வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம் சமூகம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கூச்சம் இல்லாமல் இனவாத கருத்துக்கள் தொடர்ச்சியாக விதைக்கப்படுகின்றன.
பாராளுமன்ற சபாநாயகர், பிரதிச் சபாநாயகர், சபைக்கு தலைமை தாங்கும் தவிசாளர்கள் பாராளுமன்றத்தில் இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதை அனுமதிக்க கூடாது.
ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பார்த்து நாய் என்று கூறும் நிலைமையும், எதிர்க்கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரை கரடி என்று பேசுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கௌரவம் இல்லாத செயற்பாடுகள் ஆகும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபகீரித்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். சிஸ்டம் சேஞ் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்க காலத்தில் பாராளுமன்றத்திற்குள் இனவாத கருத்துக்கள் தடை செய்யப்பட வேண்டும்.
இப்புதிய பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியின் பெரும்பான்மையான புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்விமான்களாகவும், எதிர்க்கட்சியில் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்விமான்களாகவும், அனுபவம் நிறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.
இல்லையெனில் இனவாதத்திற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்குவதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்