உலகம்

காபூல் விமான நிலைய குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம்

(UTV |  காபூல்) – நிலைமை மோசமாக உள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் காபூல் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூலில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதால் அந்த விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மக்களும் குவிந்துள்ளனர். இதனால் விமான நிலையத்தை சுற்றிலும் அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த மக்கள் பலர், மொத்தமாக விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அப்போது, அந்த கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கூட்டத்தின் முன்வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். ஆனால், 7 பேர் இறந்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

நிலைமை மோசமாக உள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் காபூல் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பமான நிலைக்கு அமெரிக்காவே காரணம் என தலிபான் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

‘விமான நிலையத்தில் மக்களை ஒழுங்குபடுத்த அமெரிக்கா தவறிவிட்டது. நாடு முழுவதும் அமைதியாக உள்ளது, ஆனால் காபூல் விமான நிலையத்தில் மட்டும் குழப்பம் நிலவுகிறது’ என தலிபான் அதிகாரி அமீர் கான் முதாகி தெரிவித்துள்ளார்.

Related posts

ஈரான் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

டிக்டாக் மீதான தடை நீக்கம்

முகநூலில் மற்றுமொரு மாற்றம்