உலகம்

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்

(UTV |  வாஷிங்டன்) – காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதையடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் மற்றும் ஆப்கான் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் நாட்டில் இருந்து வெளியேற காபூல் விமான நிலையம் முன்பு குவிந்தனர்.

அவர்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்க ராணுவ படை ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம். எனவே அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

அந்த எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே காபூல் விமான நிலையம் முன்பு இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 அமெரிக்க வீரர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் மக்களை வெளியேற்றும் பணி மீண்டும் நடந்து வருகிறது. இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என இன்று அமெரிக்க உளவுத்துறை புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

இது குறித்து அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும் போது, ‘காபூல் விமான நிலையத்தில் இன்னும் நம்பகமான அச்சுறுத்தல் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்’ என்றார்.

இதையடுத்து அமெரிக்க தூதரகம் சார்பில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதில் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

எனவே காபூல் விமான நிலையத்தில் அபே நுழைவு வாயில், கிழக்கு, வடக்கு அல்லது புதிய அமைச்சக நுழைவு வாயில் ஆகியவற்றில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.

நாங்கள் அமெரிக்க குடிமக்களுக்கு காபூல் விமான நிலையத்தை நோக்கிசெல்வதையும், விமான நிலைய நுழைவு வாயிலில் குவிய வேண்டாம் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

 

Related posts

காஸா- இஸ்ரேல் மோதலை நிறுத்த கோரி கொழும்பு ஐ. நா காரியலயத்தில் மகஜர் கையளிப்பு!

‘பெலோசியின் தைவான் பயணம் குழப்பத்தை விதைக்கிறது’

சிரியாவில் லொறியொன்றில் வைத்த குண்டு வெடித்தில் 46 பேர் பலி