உலகம்

காபூல் விமான நிலையத்தில் பொதுமக்கள் ஐந்து பேர் பலி

(UTV | காபூல்) – இருபது ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள் முக்கிய கட்டிடங்கள் அனைத்தையும் சில மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஜனாதிபதி மாளிகையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஜனாதிபதி அஷ்ரப் கனி மாளிகையில் இல்லை. அவர் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். இதனால் நாட்டின் முழு கட்டுப்பாடும் இப்போது தலிபான்கள் கையில் வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படையின் பெரும் பகுதி வெளியேறிவிட்ட நிலையில் 6,000 வீரர்கள் மட்டும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அவர்கள் தற்போது விமான நிலையத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய கட்டுப்பாட்டில் விமான நிலையம் மட்டும் செயல்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பிடித்துள்ளனர். இதனால் என்ன நடக்குமோ? என அஞ்சிய மக்கள் காபூல் நகரில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். அவர்கள் வெளியேற ஒரே வழி விமானம் மட்டுமே என்பதால், விமான நிலையத்திற்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.

இதனால் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்க வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் மக்கள் சிதறடித்து ஓடினர். இதற்கிடையே விமான நிலையத்தில் இருந்து ஐந்து பேர் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக அங்கிருந்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனரா? அல்லது கூட்ட நெரிசலில் உயிரிழந்தனரா? என்பது குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

   

Related posts

குரங்கு காய்ச்சல் வைரஸ் பரவல் குறைவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் [VIDEO]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் மோதும் ஹேக்கர்கள்