பலஸ்தீனர்களை காசாவில் இருந்து வௌியேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து அரபு நாடுகள் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு கூட்டுக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன.
ஜோர்தான், எகிப்து, சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், பலஸ்தீன ஜனாதிபதியின் ஆலோசகர் ஹுசைன் அல்-ஷேக்கும் கையெழுத்திட்டு இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
15 மாதங்களாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக காசா பிரதேசம் அழிவுற்றுள்ளது. அதனால் அங்குள்ள மக்களை ஜோர்தானும் எகிப்தும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது தொடர்பில் ஜோர்தான் மன்னருடன் பேசியுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இத்திட்டத்தை எகிப்தும் ஜோர்தானும் ஏற்கனவே மறுத்து விட்டன. இவ்வாறான சூழலில் ஐந்து அரபு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இக்கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றனர்.
அக்கடிதத்தில், காசா மக்களின் நேரடி பங்குபற்றுதல் மற்றும் ஈடுபாட்டுடன் அப்பிரதேசம் மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டும். அவர்கள் அவர்களது நிலத்தில் வாழ்வது அதனைக் கட்டியெழுப்ப உதவக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.