காசாவை கைப்பற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்திற்கு மாற்றாக பலஸ்தீனர்களை வெளியேற்றாது காசாவை கட்டியெழுப்பும் 53 பில்லியன் டொலர் திட்டத்தை அரபுத் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.
எனினும் இந்தத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்திருப்பதோடு ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்து, அந்தப் பகுதிக்கான அனைத்து உதவி விநியோகங்களையும் இஸ்ரேல் முடக்கி இருக்கும் சூழலிலேயே கெய்ரோவில் கடந்த செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அரபு லீக் அவசர மாநாட்டில் காசாவை கட்டியெழுப்பும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது எகிப்து முன்வைத்த திட்டத்திற்கு அரபுத் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
‘எகிப்தின் திட்டம் தற்போது அரபு திட்டமாகும்’ என்று அரபு லீக் செயலாளர் நாயகம் அஹமது அபுல் கெயித் கெய்ரோவில் பல மணி நேரம் நீடித்த மாநாட்டின் முடிவில் தெரிவித்தார்.
ட்ரம்பின் திட்டத்தை குறிப்பிட்டுக் கூறாத அவர், ‘தன்னார்வத்துடன் அல்லது வலுக்கட்டாயமாக எந்த ஒரு வெளியேற்றத்தையும் நிராகரிப்பதே அரபு நிலைப்பாடாகும்’ என்றார். காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களை அங்கிருந்து வெளியேற்றி அந்தப் பகுதியை அமெரிக்கா கைப்பற்றுவதாக ட்ரம்ப் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது பசுமையான சுற்றுப்புறங்கள் மற்றும் பிரமாண்டமான அரச கட்டடங்கள் உட்பட 91 பக்கங்கள் கொண்ட காசாவுக்கான விரிவான திட்டம் ஒன்றையே எகிப்து, அரபு லீக் மாநாட்டில் முன்வைத்தது. இந்தத் திட்டத்தில் காசாவை கட்டியெழுப்புவது மாத்திரமன்று அரசியல் மற்றும் பலஸ்தீன உரிமைகள் பற்றியும் பேசியுள்ளது.
மாநாட்டை ஆரம்பித்து பேசிய எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி, பௌதீக கட்டுமானங்களுடன் சேர்த்து இரு நாட்டு தீர்வை நோக்கிய நகர்வாக இதனை குறிப்பிட்டார். இஸ்ரேலுடன் இணைந்த பலஸ்தீன நாடு ஒன்றை கொண்ட இரு நாட்டுத் தீர்வையே அரபு நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் காசாவில் ஆட்சி புரிவது யார் மற்றும் அந்தப் பகுதியின் மீள் நிர்மாணத்திற்காக பில்லியன் டொலர் நிதியை அளிக்கும் நாடுகள் குறித்த முக்கிய கேள்விகளுக்கு விடை காண வேண்டி ஏற்பட்டுள்ளது.
எனினும் காசா போர் முடிவில் அந்தப் பகுதியை நிர்வகிக்க தொழில்முறை பலஸ்தீன நிபுணர்களை உள்ளடக்கிய சுதந்திர நிர்வாகக் குழு ஒன்றை அமைப்பதற்கு பலஸ்தீனர்களுடன் இணைந்து செயற்படவிருப்பதாக சிசி குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன அதிகாரசபை ஆட்சிக்கு வரும் வரை இந்தக் குழு காசாவை நிர்வகிப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளை கண்காணிப்பதற்கு பொறுப்பாக செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் காசாவில் தற்போது ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் எதிர்காலம் தொடர்பிலான விடயம் மற்றொரு தீர்க்கமான ஒன்றாக உள்ளது. 2007 தொடக்கம் அங்கு ஆட்சியில் உள்ள அந்த அமைப்பு எகிப்தின் திட்டத்திற்கு இணக்கத்தை வெளியிட்டுள்ளது.
எகிப்து பரிந்துரைக்கும் குழுவுக்கு தமது அபேட்சர்களை முன்வைப்பதில்லை என்று ஹமாஸ் இணங்கி இருந்தபோதும், குறித்த குழுவுக்கு அந்த அமைப்பு ஒப்புதல் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்களின் பெயர்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக எகிப்து வெளியுறவு அமைச்சர் பதிர் அப்தலத்தி தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன அதிகார சபையின் தலைவராக இருக்கும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எகிப்தின் திட்டத்தை வரவேற்றிருப்பதோடு பலஸ்தீன மக்களை வெளியேற்றாத இவ்வாறான திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்படி ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார். 2005 தொடக்கம் ஆட்சியில் இருக்கும் அப்பாஸ் சந்தர்ப்ப சூழல் ஏற்பட்டால், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை நடத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் தேர்தல்களை வரவேற்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘இந்தத் திட்டம் காலாவதியான கண்ணோட்டங்களில் வேரூன்றி இருப்பதாக’ குறிப்பிட்டிருப்பதோடு, பலஸ்தீன அதிகார சபையின் நிர்வாகத்தை நம்பி இருப்பதை நிராகரித்திருக்கும் அதேநேரம் ஹமாஸ் அமைப்பு ஆட்சியில் விடப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவும் இந்தத் திட்டத்திற்கு மறுப்பை வெளியிட்டுள்ளது.
‘காசாவில் மனிதர்களால் வாழ முடியாத நிலை மற்றும் இடிபாடுகள் மற்றும் வெடிக்காத குண்டுகளுக்கு மத்தியில் குடியிருப்பாளர்களால் மனிதர்களாக வாழ முடியாத நிலை ஆகிய தற்போதைய யதார்த்தத்திற்கு இந்த முன்மொழிவு விடைகாணவில்லை’ என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் பிரையன் ஹகஸ் குறிப்பிட்டுள்ளார்.
அரபு தலைவர்களின் இந்தத் திட்டத்திற்கு ட்ரம்ப் அதரவளிப்பாரா? என்று அவரிடம் கேட்டபோது, ‘ஹமாஸிடம் இருந்து காசாவை விடுவித்து கட்டியெழுப்பும் தனது திட்டத்தில் அவர் தொடர்ந்து இருக்கிறார்’ என்றார்.