உலகம்

காசாவில் போர் நிறுத்தம் நீடிப்பு – இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பலஸ்தீனர் பலி – அமெரிக்க கனரக ஆயுதங்கள் இஸ்ரேலை அடைந்தன

காசாவில் போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கும் சூழலில் அதனை மீறி இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் மேலும் சில பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இந்தப் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படை நடவடிக்கை தொடரும் சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடையை தளர்த்தியதை அடுத்து இஸ்ரேலுக்கு எம்.கே.-84 கனரக குண்டுகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

பலவீனமான இந்த போர் நிறுத்தம் முறியும் அபாயம் நீடித்து வந்த சூழலில் மத்தியஸ்தர்களின் முயற்சியை அடுத்து கடந்த சனிக்கிழமை மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததோடு அதற்கு பகரமாக சுமார் 369 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.

தெற்கு காசா நகராக கான் யூனிஸில் இடம்பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ஆயுதம் ஏந்திய ஹமாஸ் போராளிகளுக்கு மத்தியில் மேடையில் தோன்றிய மூன்று பணக்கைதிகளும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலின் ஒபர் சிறையில் இருந்து பலஸ்தீன கைதிகள் பஸ்களில் ஏற்றப்பட்டனர்.

இதில் முதல் பஸ் வண்டி ரமல்லா நகரை அடைந்தபோதும் அவர்களை பலஸ்தீன கொடிகளுடன் கூடியிருந்த மக்கள் வரவேற்றனர்.

மேலும் சில பலஸ்தீன கைதிகளுடனான பஸ்கள் காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையை சென்றடைந்தன.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட நான்கு பலஸ்தீன கைதிகள் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்கள் காரணமாக கவலைக்கிடமான நிலையில் மேற்குக் கரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 19 ஆம் திகதி ஆரம்பமான முதல் கட்ட போர் நிறுத்த காலத்தில் இதுவரை 19 பணயக்கைதிகள் மற்றும் 1,000க்கும் அதிகமான பலஸ்தின கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு வாரங்களைக் கொண்ட முதல் கட்ட போர் நிறுத்த காலத்தில் மொத்தம் 33 பணயக்கைதிகளும் 1,900 பலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர்.

எனினும் காசாவுக்கு உதவிகள் செல்வதை தடுப்பது, இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்குச் செல்வதை தடுக்கும் இஸ்ரேல், பலஸ்தீனர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு வருவாக ஹமாஸ் குற்றம்சாட்டுகிறது.

இதனையொட்டி பணயக்கைதிகளை விடுவிப்பதை ஒத்திவைப்பதாக ஹமாஸ் கடந்த வாரம் எச்சரித்தது போர் நிறுத்தம் முறியும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது.

எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. தெற்கு காசாவின் ரபா நகரில் நேற்றுக் காலை இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில் கடந்த 15 மாதங்களுக்கு மேல் நீடித்த போர் மற்றும் அதற்கு பிந்திய இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 48,264 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே மத்திய கிழக்குக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ருபியோ, நேற்று (16) ஜெரூசலத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பதவி ஏற்ற பின்னர் முதல் முறை பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ரூபியோ, காசாவில் உள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றும், ட்ரம்பின் சர்ச்சைக்குரிய திட்டம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது ரூபியோ சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் பயணிக்கவுள்ளார். காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி அதனை அபிவிருத்தி செய்யும் ட்ரம்பின் திட்டத்தை மத்திய கிழக்கு நாடுகள் கண்டிப்பாக நிராகரித்துள்ளன.

இந்தத் திட்டத்திற்கு எதிராக பிரிட்டன் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர். பலஸ்தீன கொடிகளுடன் பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய லண்டனில் இருந்து அமெரிக்க தூதரகம் வரை பேரணி நடத்தினர்.

‘இது முழுமையாக தார்மீகமற்ற, சட்டவிரோதமான, நடைமுறைச் சாத்தியமற்ற மற்றும் அபத்தமான ஒரு திட்டம்’ என்று இந்த பேரணியில் பங்கேற்ற நாஜி ஜேர்மனியின் யூத இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பிய 87 வயது ஸ்டபன் கபொஸ் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

காசா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழலில் ட்ரம்பின் கருத்துகள் போர் நிறுத்தத்தை பலவீனப்படுத்துவதோடு பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வலுவான கொங்கிறீட்டுகளையும் தகர்த்து பரந்த அளவில் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய சுமார் 907 கி.கி. எடைகொண்ட கனரக குண்டுகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இவ்வாறான குண்டுகளை வழங்க முன்னாள் அமெரிக்க நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் இந்தத் தடையை ட்ரம்ப் நிர்வாகம் நீக்கியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான நெருக்கமான உறவை உறுதி செய்யும் வகையில் இந்த ஆயுதம் கிடைத்திருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா போர் ஆரம்பித்தது தொடக்கம் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் போர் நிறுத்தம் இருந்தபோதும் மேற்குக் கரையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

ஜெனின் நகர் மற்றும் அதன் அகதி முகாமில் தொடர்ந்து 27 ஆவது நாளாக இஸ்ரேலின் சுற்றவளைப்பு நேற்றும் இடம்பெற்றது.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை 25 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பெரும் அழிவுகள் இடம்பெற்றுள்ளன.

மறுபுறம் துல்கரம் நகர் மற்றும் அதன் அகதி முகாமில் தொடர்ந்து 21 ஆவது நாளாகவும் நூர் ஷம்ஸ் முகாமில் தொடர்ந்து 8 ஆவது நாளாகவும் படை நடவடிக்கை தொடர்கிறது.

முழு முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலியப் படை உட்கட்டமைப்புகளையும் அழித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ்

உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்றாக கொரோனா

உலகளவில் எகிறும் MonkeyPox